Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பகவத் கீதையும் கோதையின் கீதையும்
 
பக்தி கதைகள்
பகவத் கீதையும் கோதையின் கீதையும்

கண்ணன் பகவத் கீதையை இந்த உலகத்துக்கு அருளினான். நம்முடைய கோதையும் அவளுடைய பகவதி கீதையை உலகிற்கு வழங்கி உள்ளாள். மகாபாரதத்தில் அர்ஜுனனுக்கு கண்ணன் உபதேசம் செய்தது தான் உலகப் புகழ் பெற்றது பகவத் கீதை.  இந்த கீதையின் சாராம்சத்தை  பல இடங்களில் பார்த்திருக்கிறோம். கீதாசாரத்தை கேட்டாலும் சரி கண்ணால் பார்த்தாலும் சரி, நம் மனம் எத்தகைய  துன்பத்தில் துவண்டு இருந்தாலும் உடனே அமைதி பெறும். கீதாசாரத்தை பலர் இல்லங்கள்,  அலுவலகங்களில் கண்ணில் படும் இடத்தில் வைத்திருப்பார்கள். ஏதோ கடவுளே நமக்காக இறங்கி வந்து நம்மை பண்படுத்துவது போல் இருக்கும். இதே போல ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவையையும்  பகவத்கீதை என்றே சொல்லலாம். எப்படி? பகவானை பற்றிய கீதை தானே இதுவும்.  
                            கண்ணன் சொன்ன கீதையை விட, ஆண்டாள் சொன்ன கீதை பல வகைகளிலும் உயர்ந்தது என அறிஞர்கள் கூறியிருக்கிறார்கள். எப்படி என பார்ப்போமா?. பகவத் கீதை அருளிய  இடத்திற்கே முதலில் செல்வோம். கண்ணனின் கீதை சண்டையும் சச்சரவுமாக உள்ள போர்க்களத்தில் தோன்றியிருக்க, கோதையின் கீதையோ ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் புனிதமான திருக்கோயிலில் தோன்றியிருக்கிறது. பகவத் கீதையா திருப்பாவையா என பார்க்கும் போது நமக்கெல்லாம் திருப்பாவை தானே மனதிற்கு நெருக்கத்தில் வருகிறது. ஏன் தெரியுமா?

                 கண்ணனின் கீதை வடமொழியில் உள்ளது.  சமஸ்கிருதம் கற்றறிந்த புலவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.  அதன் தமிழாக்கத்தை பலமுறை படித்தால் தான் கண்ணன் என்ன சொல்லியிருக்கிறார் என்பது புரியும். அத்துடன் கடினமான கருத்துக்களைக் கொண்டது. கோதையின் கீதையோ அமுதத்தமிழில் எளிய சொற்களில் அமைந்துள்ளது.  திருப்பாவையை படித்தால் சுலபமாக புரிந்து கொள்ள முடியும். அதனால் நமக்கு கீதையைக் காட்டிலும் திருப்பாவை நெருக்கமாக இருக்கிறது. அதுமட்டுமல்ல கண்ணனின் கீதை 18 அத்தியாயங்களில் 700 ஸ்லோகங்கள் கொண்டது. அடேயப்பா! எவ்வளவு பெரிய நுால்! கீதையை துாக்கி வைத்து படிக்கவே உடலில் பலம் வேண்டும். செக்குப் பலகையில் இருத்தி வைத்து படிப்பார்கள். நாம் பார்த்திருக்கிறோமே! நம் திருப்பாவையோ 30 பாடல்கள் மட்டுமே கொண்டது. ஆண்கள் சட்டைப் பையிலும் பெண்கள் கைப்பையிலும் சுலபமாக வைத்துக் கொண்டு செல்லலாம். உள்ளே பெரிய தத்துவம் பொதிந்திருந்தாலும் எல்லோருக்கும் எளிதில் புரியும் விதமாகவும் உள்ளது.  இன்னொரு சிறப்பு அத்தனையும் இனிய பாசுரங்கள். நாமே ஒரு இசையமைப்பாளராக மாறி நமக்கு பிடித்த மெட்டில் பாடி மகிழலாம். திருப்பாவையின் இசை வடிவத்தை ஆடியோவில் கேட்டாலும் திருநெல்வேலி அல்வாவை சுவைத்தது போல் இனிமையாக இருக்கும்.

                       கீதையின் நடை கடினமானது. கடினமான பாதையை தேர்ந்தெடுக்க யாருக்குத் தான் மனம் வரும்? அங்கே பல விஷயங்களை சொன்ன கண்ணன், இதையெல்லாம் கடைபிடித்தால் என்னை அடையலாம் என கடைசியில் சொன்னார்.  நான் ஒருவனே சரணடையத்தக்கவன் என்ற வரி அதை உறுதிப்படுத்துகிறது. ஆனால் திருப்பாவையில் ஆண்டாள் முதல் பாடலிலேயே அதிரடியாக போட்டு உடைக்கிறாள். எப்படி தெரியுமா? மார்கழி நோன்பிருந்து அவனை சரணடைந்தால் அவன் தன்னையே நமக்கு தருவான் எனச் சொல்லி விட்டாள். தலையைச் சுற்றி மூக்கை தொடும் சங்கதி எல்லாம் அவளிடத்தில் இல்லை. எல்லாவற்றையும் தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்கிறாள். நாராயணனே நமக்கே பறை தருவான் என்பது தான் அது. எனவே கண்ணனின் கீதையில் சொல்லப்பட்டது  ஆண்டாளின் திருப்பாவையில் எளிமையாக புரிய வருகிறது.

  கண்ணனுடைய கீதைக்கு பலரும் பலவிதமான பொருள் சொல்கிறார்கள். சங்கரர், ராமானுஜர்,  மத்துவர் போன்றோர் கீதைக்கு பல இடங்களில் வெவ்வேறு விதமாக பொருள் சொல்கின்றனர். திருப்பாவையோ அப்படி இல்லை. அதற்கு பொருள் கூறுவதில் சிற்சில கருத்து விவாதங்களைத் தவிர வேறுவித சிரமமோ குழப்பமோ இல்லை. கண்ணனின் கீதை கர்ம யோகம், ஞான யோகம், பக்தியோகம் என்னும் மூன்று கடினமான கருத்துக்களை சொல்கிறது. ஆனால் திருப்பாவையோ மிகவும் உயர்ந்த சரணாகதி தத்துவத்தை எளிமையாக சொல்கிறது.

                      இன்னும் சொல்லப் போனால் கண்ணனின் கீதையில், அர்ஜுனனே ஒரு கட்டத்தில் “ என்னை இப்படி குழப்புகிறாயே கண்ணா,  நான் என்ன செய்வேன்?” என்கிறான்.   ஆனால் திருப்பாவையில் இப்படி எந்தவித குழப்பமும் இல்லை. கோதை சொல்ல வந்த அத்தனை விஷயங்களும் தோழிகளுக்கு புரிகிறது. ஏன் நமக்குமே தெள்ளத் தெளிவாக  புரிகிறது. இதில் மற்றொரு பக்கம் பார்க்கும் போது கண்ணனுடைய கீதை வன்முறையை ஆதரிக்கிறது என்பாரும்  உண்டு.  அதாவது யுத்தகளத்தில் இரண்டு தரப்பிலும் பல்லாயிரக்கணக்கான போர்வீரர்கள் கொல்லப்படுகிறார்கள். யானைகள், குதிரைகள் பல்லாயிரக்கணக்கில் தன் உயிரை இழக்கும். எங்கு பார்த்தாலும் ரத்த வெள்ளமும், உயிர்ச்சேதமும், பிணக்குவியல்களும் கண்ணில் படும்.  அங்கே கண்ணன் துரியோதனனை எதிர்த்து யுத்தம் செய்யவே அர்ஜுனனை துாண்டுகிறான். ஆனால் திருப்பாவையோ அமைதியை  நிலைநாட்டுகிறது. கடவுளிடம் சரணாகதி அடைந்து இன்பமுற்று வாழும் வாழ்க்கையை வலியுறுத்துகிறது. இதையே ஒரு ஆண் சொல்லுக்கும் பெண் சொல்லுக்கும் உள்ள வித்தியாசமாக நம்மால் பார்க்க முடிகிறது.

                              பகவத் கீதையில் நாராயணன் தான் அந்த பரம்பொருள் என்று ஒரு அத்தியாயத்தில் கூட கண்ணன் சொல்லவில்லை. இதில் தான் தான் கடவுள் என்று எப்படி தன்னையே முன்னிலைப்படுத்திக் கொள்வது என்ற பணிவு காரணமாக இருக்குமோ என்று என் சிற்றறிவில் ஆராய்ந்து பார்க்கிறேன். ஆனால் கோதையின் திருப்பாவையின் முதல் பாட்டிலேயே  ’யசோதா மடியில் அமர்ந்திருக்கின்ற இளஞ்சிங்கம் நாராயணனே. அவனை மறவாதீர்கள் என்கிறாள்  ஆண்டாள்’. ஆக இங்கு கடவுள் யார் என்பதை ஆண்டாள் நமக்குச் சொல்லி வழி காட்டுகிறாள்.  

                                கண்ணனை பார்த்திருக்கிறீர்களா? எப்போதும் சங்கையும் சக்கரத்தையும் கையில் வைத்தபடி காட்சியளிப்பான். நாமெல்லாம் இப்போது கையில் அலைபேசியுடன் இணைபிரியாதிருப்பது போலத்தான். அப்படிப்பட்ட அந்த சங்கை பற்றியும் சக்கரத்தை பற்றியும்  கண்ணன் கீதையில் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.   ஆனால் கோதை இப்படி இருப்பாளா? திருப்பாவையில்‘  சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையான் என்று கூறுகிறாள்.   
                           அதுமட்டுமல்ல கண்ணனை பற்றிய ஏராளமான விஷயங்களை மிகச் சுலபமான முறையில் நமக்கு தெரிவித்து வழிகாட்டி இருப்பதோடு ‘ வையத்து வாழ்வீர்காள்’ என்று எல்லோரையும் அழைத்து உபதேசம் செய்திருக்கிறாள் ஆண்டாள் .  ‘செய்யாதன செய்வோம்’  என்று ஒரே வார்த்தையில் செய்யக்கூடாது என்று வேதங்களில் சொல்லி இருக்கின்ற தீய காரியங்களை செய்யக்கூடாது என்று நமக்கு சொல்லிவிட்டாளே! போக வேண்டிய ஊருக்கு வழி கேட்டால், இடது புறம் திரும்பி, வலது புறம் திரும்பி, மேலும் இடது, வலது, மீண்டும் வலது, இடது என்று சொன்னால் நமக்கெல்லாம் பைத்தியம் பிடிக்கும் அல்லவா? ஆனால் ஆண்டாளைப் பாருங்கள்.  சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறாள்.

                      பகவத் கீதையை எப்படி சுருக்கமாக சொல்வது என்பதற்கு ஒரு கதை இருக்கிறது. மகாபாரதத்தை எழுதியது வியாசர் என்பது நமக்குத் தெரியும். அவருடைய மகனான சுகர் ஒருமுறை தன் தந்தையிடம் உரையாடும் போது ‘ எழுதப் படிக்கத் தெரியாத மக்களுக்கு சுருக்கமாக கீதையை எப்படி சொல்வீர்கள் எனக் கேட்டார்.  அவர் கீதையை சுருக்கி எழுதியபோது,  அதை பார்த்துவிட்டு இன்னும் சுருக்கமாக என்றார். மறுபடியும் இன்னும் சுருக்கமாக எழுதிய போது இன்னும் இன்னும் என்று கேட்டுக் கொண்டே இருந்தார் சுகர். இறுதியாக வியாசர், “ உனக்கு கீதையின் சாரத்தை ஒரே வரியில் சொல்கிறேன் கேள்” என்று சொல்லிவிட்டு
                    கடமையைச் செய்! பலனை எதிர்பார்க்காதே!! என்றாராம்.

                        ஒன்றாம் வகுப்பு  படிக்கும் ஒரு குழந்தையிடம் அக்குழந்தையின் தந்தை, “நீ தினசரி வீட்டுப் பாடத்தை ஒழுங்காக எழுது.  அப்படி எழுதினால் உனக்கு ஒரு சைக்கிள் வாங்கித் தருகிறேன்” என்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அந்த குழந்தை என்ன செய்யும்?  சைக்கிளுக்கு ஆசைப்பட்டு வீட்டு பாடத்தை ஒழுங்காக முடித்துவிடும். தந்தையும் அவ்வப்போது இந்த நடைமுறையை செயல்முறைப்படுத்திக் கொண்டே வருவார். ஐந்தாம் வகுப்பு தாண்டிய பிறகு ஒரு கட்டத்தில் குழந்தைக்கு தினசரி வீட்டுப்பாடம் செய்ய வேண்டியது தன் கடமை என்பது புரிந்துவிடும். கடவுளும் இப்படித்தான். அவ்வப்போது நமக்கு ஆர்வமூட்டி அவர் வசம் இழுப்பார். பகவான் நமக்கு கொடுக்கும் ஆர்வம் தான் சாஸ்திரம். நிலையான இன்பம் என்பது பகவானை பற்றிக் கொள்வது தான். அது பக்தி செய்தால் நமக்கு கிடைத்துவிடும் என்பதை தான் இரண்டு கீதைகளும் சொல்கின்றன. பகவத் கீதை சிறந்ததா திருப்பாவை சிறந்ததா என்றுச் சொல்வதல்ல இந்த கட்டுரையின் நோக்கம். இரண்டுமே உயர்ந்தது தான். தனித்துவமானது தான். ஆண்டாள் அருளிய திருப்பாவையின் கருத்துக்கள் நமக்கு எப்படி இத்தனை நெருக்கமாகிப் போயின என்று ஆராய விளைந்ததன் பயன் தான் இது. சைவம் சிறந்ததா வைணவம் சிறந்ததா என்பது போல் தான் இது. யாராலும் விடை சொல்ல முடியாது.  
            கீதையில் இல்லாத விசேஷம் திருப்பாவையில் உண்டு. ஆங்கிலத்தில் ‘பினிஷிங் டச்’ என்று சொல்வார்களே அதுதான். ஒரு திருமணத்துக்கு போகிறோம். உள்ளே நுழையும்போது எப்படி பன்னீர் தெளித்து வரவேற்கிறார்களோ வெளியேறும் போது தாம்பூலப்பை கொடுத்து வழியனுப்பி வைப்பார்கள். நல்ல அறுசுவை உணவு சாப்பிட்டு மணமக்களை வாழ்த்தி விட்டு வெளியேறும் போது திருப்தியாய் வீட்டுக்குச் செல்வோம் இல்லையா? அப்போது ஒரு நிறைவு வரும் பாருங்கள்! அது போன்றதொரு நிறைவு திருப்பாவையில் இருக்கிறது. ஏன் எந்த  ஒரு சுப நிகழ்ச்சியிலும் கடைசியில் ஆரத்தி எடுத்து மங்கலம் பாடி வாழ்த்துவது போல ஒவ்வொரு பாசுரத்தின் கடைசி அடியிலும் நம்மையெல்லாம் ஆண்டாள் அழகாக, அருமையாக வாழ்த்துகிறாள்.  
‘ பாரோர் புகழ படிந்து
 நீங்காத செல்வம் நிறைந்தேலோ‘
 என இப்படி நம் வாழ்வுக்கு வாழ்த்துப்பாடும் திருப்பாவையை நாமும் தினமும் சொல்லி கடவுளின் மீது நீங்காத பக்தி கொள்வோம். தொடர்ந்து பயணிப்போம் வாருங்கள்!

                                                                                                  


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar