Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » சத்யவான் சாவித்ரி
 
பக்தி கதைகள்
சத்யவான் சாவித்ரி


மனஉறுதி மிகுந்த சாவித்ரி அதன் பின் அந்த வனத்தில் கண்நிறைந்த கணவனுடன்  வாழத் தொடங்கினாள். மாமனார் மாமியாருக்கான பணிவிடைகளை குறையின்றிச் செய்தாள்.
அவளால் அந்த வன வாழ்வில் தொடர்ந்து தாக்குப்பிடிக்க முடியாது என்று தான் சத்யவான் நினைத்தான். ஆனால் சாவித்ரியின் பொறுமை, பணிவு, அன்பு, பாசம் என்ற சகலத்தையும் கண்டு மிகவே அவள் மீது காதலுள்ளவனாக ஆகினான். ஒருநாள் அதை மனம் விட்டுக் கூறவும் செய்தான்.
‘‘சாவித்ரி... என் தர்மபத்னியே!
நான் மிகுந்த துரதிஷ்டசாலி என கருதியிருந்தேன். என் வாழ்வில் நீ வந்தபின் எல்லாம் மாறி விட்டது. நான் பெரும் பாக்கியசாலி.
உண்மையில் எனக்கு ஏற்றவளாக நீ இருக்கிறாய். ஆனால் உனக்கு நான் ஏற்றவன் தானா என எண்ணிப் பார்க்கிறேன். இல்லை என்றே மனம் சொல்கிறது’’ என்றான். சாவித்ரி அதைக் கேட்டு அவன் வாயைப் பொத்தியவளாக, ‘‘எதற்கு இந்த ஆராய்ச்சி இப்போது... பாலோடு தேன் கலந்தாலும், தேனோடு பால் கலந்தாலும் இரண்டும் ஒன்றாகி விடுவதை யாரால் மாற்ற முடியும். நான் பால் என்றால் நீங்கள் தேன். நீங்கள் தேன் என்றால் நான் பால்! திருமண பந்தத்தால் ஒருவருக்கு ஒருவர் கலந்து விட்டோம். இந்த ஒன்று எக்காலத்திலும் இரண்டாக ஆகவே ஆகாது’’ என உதாரணங்களுடன் பேசினாள்.
சத்யவான் அவளை அணைத்து மகிழ்ந்தான். சாவித்ரியும் மிக மகிழ்ந்தாள். நாரதர் சொன்ன அந்த மூன்று நாட்கள் விரதமான, ‘ஏகாதசி, துவாதசி, திரயோதசி’ நாட்களில் முழுவிரதமும் இருந்தாள். அதைக் கண்ட சத்யவான், ‘சாவித்ரி யாருக்காக இந்த விரதம்... இப்படியா மூன்று நாட்கள் உண்ணாதிருப்பாய்’’ என்று கேட்டான்.
‘‘நம் எல்லோரின் நலனுக்காகவும் தான்’’ என்று அவனைச் சமாளித்தாள். நாட்களும் ஓடி உருண்டு ஓராண்டு முடிந்து சத்யவானுக்கான இறுதி நாளும் வந்தது. படபடப்போடு ரகசியமாக அந்த நாளை எதிர்கொண்டாள் சாவித்ரி.
அன்று சத்யவான் காட்டுக்கு விறகோடு கனிகளும் பறிக்க புறப்பட்ட போது நானும் வருகிறேன் என்றாள். ‘‘வேண்டாம். இது பயங்கரகாடு. உனக்கோ பஞ்சு போன்ற பாதங்கள். உன்னாலும் மேட்டிலும் பள்ளத்திலும் நடக்க முடியாது’’ என்றான்.
‘‘பரவாயில்லை. நான் முயன்று பார்க்கிறேன். நீங்கள் இருக்கும்போது என்ன கவலை’’ என்று கேட்டாள். மாமனாரான துய்மத்சேனன் கூட, ‘‘சாவித்ரி சொல்லாதே. எங்களுக்கு காவலாக இரு. இது கொடிய வனம். உன்னால் விஷ முட்களையும், மிருக தாக்குதல்களையும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது’’ என்று கூறிப் பார்த்தான். துய்மத்சேனனையும் சமாளித்து அவன் வாயாலேயே சத்யவானுடன் செல்ல சம்மதிக்க வைத்தாள்.
‘‘மாமா... நான் வரும் முன்பு நீங்கள் தனித்து தானே இருந்தீர்கள்? இப்போது மட்டும் என் காவல் தேவை என்பது எதனால்? இந்த வனவாழ்வில் அதன் கொடிய தன்மைகளை தெரியாமல் வாழ்வது பிழையல்லவா? கணவன் படும் பாட்டில் மனைவிக்கும் பங்குண்டு தானே... சுகத்தில் மட்டும் பங்கு, மற்றதில் இல்லையென்பது எப்படி சரி?’’ என்று கேட்டு துய்மத்சேனன் வாயை அடைத்தாள். பின் அவன் வாயாலேயே, ‘‘போய்வா மருமகளே! உனக்கு தேவர்கள் காவல் இருப்பர்’’ என்றான். அதன்பின் சத்யவான் மறுப்பேதும் கூறவில்லை. அவளுடன் மையவனம் நோக்கி புறப்பட்டான். வழியெங்கும் மயில்களின் அகவல்... வாலாட்டி குருவிகளின் கீச்சொலி, தேனீக்களின் ரீங்காரம், பூக்களின் வாசம் என ரம்மியங்களை ரசித்தவள் கூடவே எமன் எப்போது வேண்டுமானால் வருவான் என்பதையும் எண்ணி வானைப் பார்க்கலானாள். அப்போது பல தேவர்கள் வானில் செல்வது கண்களுக்கு நன்கு புலனாயிற்று. தேவ மங்கையர் பலர் வாகனங்களில் சென்ற வண்ணம் இருந்தனர். அன்ன வாகனம், மயில்வாகனம், ரிஷப வாகனம், கருட வாகனம் என அவை அவளை ஈர்த்தன. கூடவே அவர்கள் நடுவே எமன் தென்படுகிறானா என பார்த்தாள். சத்யவானோ அவள் வானில் மேகங்களின் அழகை ரசிப்பதாக கருதினாள். ‘‘சாவித்ரி இந்த வனம் உனக்கு அச்சம் தராமல் அழகை அள்ளித் தருகிறது போல் தெரிகிறதே?’’ என்றான்.

ஆம் என்று சமாளித்தவள் அவன் இறுதிவரை உயிரச்சம் இல்லாதிருப்பதையே விரும்பினாள். அதனால் தன் மனதில் அந்த வனத்தின் அழகை ரசிக்காமல், அவன் மேலான உயிரச்சத்தை மறைத்துக் கொண்டு அவனிடம் ஆமோதித்தாள். அவர்கள் தொடர்ந்து நடந்தனர். சாவித்ரி விரதம் இருந்து யோக பலத்தோடு இருந்ததால் அந்த வனத்துக்குள் ஒரு பாம்பு புற்றை கடக்கையில் ஒரு முனிவர் அதனுள் தவத்தில் ஆழ்ந்திருப்பது அவளுக்கு புலனாயிற்று.
அதே போல ஒரு புற்றில் நாகம் ஒன்று நாகரத்தினத்தை உமிழ்ந்த நிலையில் சுருண்டு படுத்திருந்தது அவளுக்குத் தெரிந்தது. அது அசாதாரணமான நாகரத்தினம். ஒருவரது கிரீடத்திலோ இல்லை ஹாரத்திலோ அது இருந்தால் அவர் தேவனுக்கு ஒப்பானவராகி விடுவார். அவருக்கு எதிலும் வெற்றியே, எங்கும் வெற்றியே! கிரக சாரங்களின் எதிர்மறை தாக்கங்களை எல்லாம் அது நேர்மறையாக்கி விடும். இப்படி ஒரு நாகரத்தினத்துக்காக பலர் காட்டில் பல காலமாக அலைந்தபடி உள்ளனர். நுாறு ஆண்டு வாழ்ந்து முடித்த ஒரு அரவத்தின் விஷப்பை தான் முதுமையில் இறுகிச் சுருங்கி கல் போலாகி பின் ரத்தினமாகி விடும். அதை சுமப்பது அந்த அரவத்துக்கும் பெரும் அவஸ்தையாக இருக்கும். அதனால் அதை உமிழ்ந்து பின் அதன் மீது உடம்பைச் சுருட்டி படுத்து விடும். அந்த அரவமும் அப்படி படுத்திருந்தது.
சாவித்ரியின் யோக சக்திக்கு அபூர்வமானவை கண்ணில் பட்டன. பேசும் திறனுள்ள கந்தர்வ லோகத்து கிளிகள், சாபத்தால் மான்களாகிப் போன யட்சர்கள், பாதாளத்தில் பாய்ந்தோடும் நதிகள் என வனத்தின் அபூர்வங்களை மேலோட்டமாக
ரசித்தபடி எமனின் வரவை எதிர்பார்த்தபடி சத்யவானுடன் நடந்தாள்.  
ஒரு மரம் பட்டுப் போயிருந்தது. காரணம் அதன் மீது விழுந்திருந்த இடி. அந்த மரத்தை விறகுக்காக வெட்டத் தீர்மானித்த சத்யவான் அதை மூன்று முறை வலம் வந்து பின் அதை வணங்கி விட்டே வெட்டத் தயாரானான். முன்னதாக சாவித்ரியை அருகிலுள்ள ஒரு பாறை மீது அமரச் செய்து விட்டு வந்து வெட்டத் தொடங்கினான். அவன் பட்ட மரத்தை வணங்கியது எதற்காக என அவள் கேட்டாள்.
‘‘எந்த மரமாக இருந்தாலும் அது விருட்சம் சாவித்ரி. நாம் நடமாட முடிந்த உயிரினம். மரமானது நடமாடத் தேவையில்லாத உயிரனம். நம் ஆயுள் நம் நட்சத்திரத்தின் இரு முழு சுற்றுக்காலம்! அதாவது 120 ஆண்டுகள். விருட்சத்தின் ஆயுள் அதற்கு ஆயிரமாயிரம் ஆண்டுகள்.
எல்லா விதத்திலும் அது மனிதனை விட மேலானது. தனக்கென வாழாதது. பட்சிகளின் வீடு அது. நமக்கெல்லாம் நிழலை எப்போதும் தருவது. பருவ காலங்களில் பூ, காய், கனி இவைகளைத் தருகிறது.
தழைக்க முடியாத போதும் தச்சன் கைகளில் அகப்பட்டு வாசல் நிலைகளாய், தடுப்புக் கதவுகளாய், சிற்ப வடிவமும் கொள்ள முடிவதாய் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பயன் தருகிறது. மண்ணில் புதையுண்டாலும் வைரமாகி விடக் கூடியது. எனவே அதை வணங்குவதே பண்பும் பயனுமாகும்.
அதனால் நம் போல பேச முடியாவிட்டாலும் நம் பேசுவதை அது உணரக் கூடியது. ஒரு மரத்திடம் நீ நட்பு பாராட்டலாம். உறவைக் கூட ஏற்படுத்திக் கொள்ளலாம். அன்போடு அதனிடம் அது தர முடிந்ததைக் கேட்கலாம். அதோ அந்த பலா மரத்திடம் நான் சில தினங்களுக்கு முன்பு தான் அடித்தண்டில் எனக்கு ஐந்து கனிகள் வேண்டும் எனக் கேட்டேன். இப்போது பார். அதன் அடிப்பாகத்தில் எண்ணி ஐந்து கனி உருண்டைகள்’’  
சத்யவான் சொல்லச் சொல்ல சாவித்ரி சிலிர்த்துப் போனாள்.
‘‘அது மட்டுமல்ல. சாவித்ரி... இந்த மரங்கள் செடி கொடிகளைப் போலவே விலங்குகளிடமும் நட்பு பாராட்டலாம். நம் அன்பை அவை உணரும்படிச் செய்து விட்டால் போதும். செயற்கை அன்பு பயன் தராது. நம் முன்னோர்களின் ஒருவராக உறவாக கருதி நாம் அவைகளைப் பார்க்க வேண்டும். பேசவும் வேண்டும். நம் கரங்களால் தொட்டு அன்பை உணரச் செய்ய முடியும்’’ என அவன் கூறும் போது நல்ல புஷ்டியான சிங்கம் ஒன்று எதிரில் மிக சகஜமாய் நடந்து வந்தது.
‘‘ேஹ... வனராஜனே! வா இப்படி. என்ன உனக்கு இன்று இரை கிடைக்கவில்லையா...’’ என நட்புடன் எதிர்கொண்டான் சத்யவான். அதுவும் நாவைச் சுழற்றி நக்கியபடி அவன் முன் வந்து நின்று சாவித்ரியையும் பார்த்தது.
‘‘அஞ்சாதே சாவித்ரி... இவன் என் நண்பன். அரிமாலன் என அழைப்பேன். அந்தப் பெயரைச் சொன்னாலே உற்சாகமாகி விடுவான்’’ என சத்யவான் சொல்லும் போதே அந்த சிங்கம் கர்ஜித்தபடி அவன் மார்பின் மீது தன் கால்களை வைத்து பதிலுக்கு தன் அன்பைக் காட்டியது.
இதைக் கண்ட சாவித்ரி நெகிழ்ந்து போனாள். காடே சத்யவானுக்கு கட்டுப்பட்டு கிடப்பதை உணர்ந்து சிலிர்த்தாள். இயற்கையோடு அவன் இரண்டறக் கலந்து வாழும் ஒரு வாழ்வுக்கு இன்னும் சில மணிகளோ, இல்லை சில நிமிடங்களோ தான் ஆயுள்!
அதை நினைத்த போது அவளுக்கு கண்ணீர் துளிர்த்தது. கண்களைத் துடைத்துக் கொண்டு விண்ணைப் பார்த்தபோது எருமை மீது கையில் பாசக்கயிறு, கதாயுதம் தாங்கி எமன் வருவது பளிச்சென தெரிந்தது!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar