Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » வாதாபி இல்வலவன் வதம்
 
பக்தி கதைகள்
வாதாபி இல்வலவன் வதம்


அஜமுகி (ஆட்டின் முகம் கொண்டவள்) என்பவள் சூரபதுமன், சிங்கமுகன், தாருகன் என்னும் மூன்று அசுரர்களின் சகோதரி. அவள் சிறு வயதில் இருந்தே முனிவர்களின் தவத்தைக் கலைப்பது, அவர்களைக் கேலி செய்வது, அவர்களைத் துன்புறுத்துவது போன்ற செயல்களைச் செய்து, அதில் மகிழ்ச்சி அடைந்து வந்தாள்.

திருமணம் செய்து கொள்ளும் பருவ வயதை அடைந்த பின்பும் அவளின் குணம் மாறவில்லை, முனிவர்களுக்கு ஏதாவதொரு வகையில் தொல்லை கொடுத்துக் கொண்டு தானிருந்தாள்.

ஒருமுறை அவள், அருகிலிருந்த ஆசிரமத்தில் தவமிருந்த துர்வாச முனிவரின் தவத்தைக் கலைத்து தன்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டினாள். அதைக் கேட்ட முனிவர், “அரக்கியான உன்னை எப்படித் திருமணம் செய்வேன்? இனிமேல் என்னை தொல்லை செய்யாதே, செய்தால் சாபம் கொடுத்து விடுவேன்” என எச்சரித்து அனுப்பினார்.

ஆனால் அஜமுகி அவரது அறிவுரையை ஏற்கவில்லை. தினமும் முனிவரின் தவத்தைக் கலைத்து திருமணம் செய்ய வேண்டுவதும், முனிவர் திட்டுவதும் தொடர்ந்து கொண்டேயிருந்தது. ஒரு நிலையில் துர்வாச முனிவரும் மனம் மாற்றமடைந்து அவளைத் திருமணம் செய்தார். வாதாபி, இல்வலவன் என்று இரு ஆண் குழந்தைகள் பிறந்தன. தாயைப் போன்று ஆட்டு முகத்துடன் இருந்தான் வாதாபி. இல்லவன் தந்தையைப் போன்றிருந்தான். ஆனால் இருவரிடமும் அசுர குணங்களே நிரம்பியிருந்தன.

இருவரும் தாயைப் போல சிறு வயதிலேயே முனிவர்களைத் துன்புறுத்தி அதில் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்களால் பாதிக்கப்பட்ட முனிவர்கள், துர்வாசரிடம் குறை கூறிச் சென்றனர். துர்வாசர் இருவரையும் கண்டித்த போதும், அவர்கள் பொருட்படுத்தவில்லை.      

இருவரும் எப்படியாவது தந்தையின் தவ வலிமையைப் பெற்று உலகை ஆட்சி புரிய வேண்டுமென விரும்பினர். ஆனால் அவர்களின் எண்ணத்தை அறிந்த துர்வாசர் தன் தவவலிமையத் தர முடியாது என மறுத்து விட்டார். அதன் பிறகு இருவரும் தந்தையான துர்வாசரிடம் அடிக்கடி சண்டையிடத் தொடங்கினர்.

ஒருநாள் கோபமடைந்த முனிவர், “முனிவர்களைத் துன்புறுத்தும் அசுர குணங்களைக் கொண்டிருக்கும் நீங்கள் இருவரும் விரைவில் முனிவர் ஒருவரால் அழிக்கப்படுவீர்கள்” என சாபமிட்டார்.  

தந்தையிடம் சாபம் பெற்ற பின் இருவருக்கும் முனிவர்கள் மேலிருந்த வெறுப்பு மேலும் அதிகமானது. பிரம்மாவை வேண்டி, முனிவர்களை அழிப்பதற்கான வரத்தைக் கேட்டுப் பெறுவதென முடிவு செய்தனர். கடும்தவம் புரியத் தொடங்கினர். இதையறிந்த பிரம்மா அவர்களுடைய தவத்தை ஏற்காமல் புறக்கணித்து வந்தார்.

அதன் பிறகு வாதாபி, இல்லவன் விரும்பும் வரத்தைப் பெற வேள்வியைத் தொடங்கினர். அவர்கள் வேள்வியைச் செய்த போதும் பிரம்மா அவர்கள் முன்பாகத் தோன்றவில்லை. இந்நிலையில் கோபமடைந்த இல்வலவன் வாதாபியிடம், நம் தவத்தை ஏற்காத பிரம்மாவை வேண்டி வேள்வி செய்வது சரியான செயலல்ல என சண்டையிட்டான். ஆனால் வாதாபி வேள்வியை விடாமல் செய்து கொண்டிருந்தான். அதனைக் கண்டு கோபமடைந்த இல்வலவன், வாதாபியை வெட்டி அந்த வேள்வித்தீயில் பலியிட அவன் எரிந்து சாம்பலானான்.

தன் சகோதரனையே பலியிட்டு விட்டானே என வருந்திய பிரம்மா காட்சியளித்து என்ன வரம் வேண்டுமெனக் கேட்டார்.

அவரை வணங்கிய இல்வலவன், தன் சகோதரன் வாதாபியை உயிர்ப்பிக்கவும், முனிவர்களை அழிப்பதற்குத் தேவையான வரத்தையும் தருமாறு வேண்டினான்.

அதைக் கேட்ட பிரம்மா, “இல்வலவா, உன் சகோதரனை உயிர்ப்பித்துத் தருகிறேன். தவம் செய்து வலிமைகளைப் பெற்ற முனிவர்களை அழிப்பதற்கு எந்த வரத்தையும் என்னால் தர இயலாது, வேறு ஏதாவது வரம் கேள்” என்றார். பின்னர் அவர் வேள்வித் தீயை நோக்கி ‘வாதாபி எழுந்து வா’ என்றார்.

வாதாபி முன்பு எப்படியிருந்தானோ அப்படியே வெளியில் வந்தான். அதனைக் கண்டதும், இல்வலவன், “சுவாமி... எதிர்காலத்தில் வாதாபி இறந்தாலும், நான் அழைத்தவுடன் மீண்டும் உயிர் பெற்று வர வேண்டும்” என வரம் கேட்டான்.

பிரம்மாவும் வரமளித்து விட்டு புறப்பட்டார். அதன் பிறகு இருவரும் முனிவர்களை அழிப்பதற்காக ஒரு வழியைக் கண்டுபிடித்தனர்.

சிவனடியார் போல் மாறிக் கொண்டு, இருவரும் காட்டில் சுற்றினர். முனிவர் யாரும் வந்தால்,  அவரை வணங்கி விருந்துக்கு வரும்படி வீட்டுக்கு அழைத்துச் செல்வர். விருந்துக்கான உணவில் வாதாபியை வெட்டிச் சமையலில் சேர்த்து உணவாக்கி முனிவருக்கு இல்வலவன் வழங்குவான்.

விருந்து முடிந்த பின் முனிவர் வாதாபியைக் காணவில்லையே எனக் கேட்கும் போது, ‘வாதாபி எழுந்து வெளியில் வா’ என்று அழைப்பான். முனிவரின் வயிற்றுக்குள் உணவாகச் சென்ற வாதாபி, அவரின் வயிறைக் கிழித்துக் கொண்டு உயிருடன் திரும்ப வருவான். இப்படி முனிவர்களை இருவரும் சேர்ந்து கொன்று வந்தனர்.  

இந்நிலையில் குடகு நாட்டுக்கு வந்த அகத்தியரை விருந்துக்கு வருமாறு அழைத்தனர். அவரும் சம்மதித்தார். இல்வலவன் வழக்கம் போல் வாதாபியை வெட்டி உணவில் சேர்த்துச் சமைத்தான். பின்னர் அகத்தியருக்கு உணவைப் பரிமாறினான். வாதாபியை வெட்டி சமைத்ததும், சகோதரர் இருவரும் பல முனிவர்களைச் சூழ்ச்சியுடன் கொன்றதும் அவரது கண் முன்னேக் காட்சியாகத் தோன்றி மறைந்தது.

எதையும் காட்டிக் கொள்ளாமல் சாப்பிட்ட அகத்தியர் உண்ட உணவு செரிக்க வேண்டுமென சிவனை வேண்டினார். அவரது வேண்டுதலால் வயிற்றுக்குள் இருந்த வாதாபியும் செரிமானமாகி விட்டான்.

 வாதாபியைக் காணவில்லையே என எதுவும் தெரியாதது போல் கேட்டார் அகத்தியர். உடனே இல்வலவனும் ‘‘வாதாபி எழுந்து வா’’ என்றான். ஆனால் அவன் வரவில்லை. இல்வலவன் பலமுறை அழைத்தும், செரிமானமாகி விட்ட வாதாபியால் வெளியே வர முடியவில்லை.

 “உன் சகோதரன் வாதாபி என் வயிற்றுக்குள் செரிமானமாகி விட்டான். அவனால் வெளியே வர முடியாது. இனி நீயும் முனிவர்களை விருந்துக்கு அழைத்து கொல்ல முடியாது” என்றார் அகத்தியர்.  

கோபமடைந்த இல்வலவன், தன் உண்மையான உருவத்திற்கு மாறி தாக்க முயன்றான். உடனே அகத்தியர் தன் கையில் இருந்த தர்ப்பைப் புல்லை எடுத்து சிவபெருமானை வேண்டியபடி  இல்வலவன் மீது வீசினார். அந்தத் தர்ப்பைப் புல் ஒரு ஆயுதமாக மாறி இல்வலவனைக் கொன்றது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar