காரமடை அரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

டிசம்பர் 23,2023



மேட்டுப்பாளையம்; வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, காரமடை அரங்கநாதர் கோவிலில், சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக வந்து, அரங்கநாத பெருமாளை வழிபட்டனர்.

கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம் காரமடை அரங்கநாதர் கோவில். இங்கு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, இம்மாதம், 13ம் தேதி திருமொழித் திருநாள் என்னும் பகல் பத்து உற்சவம் துவங்கியது. தினமும் அரங்கநாத பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அலங்காரம் நடைபெற்றது. நேற்று இரவு அரங்கநாத பெருமாள், நாச்சியார் மோகனி அவதார கோலத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதைத் தொடர்ந்து வைகுண்ட ஏகாதசி உற்சவத்தின் முக்கிய நிகழ்வான, சொர்க்கவாசல் திறப்பு, இன்று காலை நடந்தது. அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் நடை திறந்து, மூலவர் அரங்கநாத பெருமாளுக்கு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. தொடர்ந்து சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக சிறப்பு அலங்காரத்தில், உற்சவர் அரங்கநாத பெருமாள், ஆண்டாள் சன்னதி அருகே எழுந்தருளினார். சிறப்பு பூஜை செய்த பின், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர் ஆகிய மூன்று ஆழ்வார்கள், சொர்க்கவாசல் முன்பு பெருமாளை எதிர்கொண்டு சேவித்தனர். அதன்பின்பு சொர்க்கவாசல் காலை, 5:45 மணிக்கு திறக்கப்பட்டது. சுவாமியிடம் இருந்த, சடாரியை அர்ச்சகர்கள் எடுத்து வந்து, மூன்று ஆழ்வார்களுக்கும் மரியாதை செய்தனர். அதைத் தொடர்ந்து சேஷ வாகனத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நான்கு ரத வீதிகளில் பல்வேறு சமூகத்தினர் பந்தல்களை அமைத்திருந்தனர். ஒவ்வொரு பந்தலிலும், சுவாமியை நிறுத்தி பூஜை செய்து வழிபட்டனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்