08-ஜனவரி-2026
பந்தலூர்; பந்தலூர் அருகே நெல்லியாலம் சுற்று வட்டார பகுதிகளில், கடும் குளிரிலும் இளைஞர்கள் ராமர் பஜனை கம்பம் வீடுகள் தோறும் பூஜைகள் பெற்று செல்கின்றனர். மார்கழி மாதம் முதல் தேதி முதல் பொங்கல் நாளன்று வரை, ராமர் பஜனை கம்பம் எடுக்கும் நிகழ்வு கிராமங்களில் நடந்து வருகிறது. மார்கழி முதல் தேதி இதற்காக சிறு வயது இளைஞரை தேர்வு செய்து, அவர் மூலம் அலங்கரிக்கப்பட்ட ராமர் பஜனை கம்பம் (விளக்கு) வீடுகள் தோறும் எடுத்துச்சென்று, இசையுடன் ராமர் பஜனை பாடல்கள் பாடி ராம நாமத்தின் முக்கியத்துவம் மற்றும் பக்தியை உணர்த்தும் பாரம்பரிய நிகழ்வை நடத்தி வருகின்றனர். நெல்லியாலம் மாரியம்மன் கோவில் சார்பில், ராமர் பஜனை கம்பம் நெல்லியாளம், வாழவயல், குன்றில்கடவு, பொன்னானி, அம்பலபாடி உள்ளிட்ட கிராமங்களுக்கு, இரவு 7 மணி முதல் நள்ளிரவு 10:00 மணி வரை ஒவ்வொரு பகுதியாக சென்று வருகின்றனர். வீடுகளுக்கு வரும் கம்பத்திற்கு மஞ்சள் நீர் ஊற்றி, மாலை அணிவித்து பூஜை செய்து பக்தர்கள் வழிபடுகின்றனர். தை முதல் தேதி, கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, வீதிகள் தோறும் ரதம் மூலம் ராமர் எடுத்துச் செல்லப்பட்டு பூஜைகள் செய்யப்படும். கடும் குளிரிலும், வன விலங்குகளுக்கு மத்தியிலும் இறை பக்தியை மக்கள் மத்தியில், உணர்த்தும் இளைஞர்களின் நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்து வருகிறது.