ஜனவரி 03,2025
ஸ்ரீரங்கம்; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் பகல் பத்து நான்காம் நாளில் நம்பெருமாள் முத்து கிரீடம் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரங்கா ரங்கா என பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
108 வைணவ தளங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றி வணங்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதேசி பெருவிழா 21 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். அந்த வகையில் கடந்த 30 ஆம் தேதி திரு நெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. கடந்த 31ஆம் தேதி பகல் பத்து உற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் நான்காம் திருநாளான இன்று நம்பெருமாள் முத்துகொண்டை எனப்படும் முத்துகிரீடம் அணிந்து, வைர பெருமாள் தாயார் பதக்கம், ரத்தின அபயஹஸ்தம், வைரப்பதக்கம், நெல்லிக்காய் மாலை, முத்துசரம், அடுக்கு பதக்கங்கள் பின்புறம் புஜகீர்த்தி உள்ளிட்ட திருவாவரணங்கள் சூடி மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி, அரையர் பாசுரங்களை கேட்டருளி, அர்ச்சுன மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். தொடர்ந்து இன்று மாலை வரை அர்ஜுன மண்டபத்தில் பக்தர்களுக்கு சாட்சி அளிக்கும் நம்பெருமாள் இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்று அடைகிறார். வைகுண்ட ஏகாதேசி பெருவிழாவில் வருகிற ஜனவரி ஒன்பதாம் தேதி பகல் 10 நிறைவு நாளான அன்று நம் பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சியளிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு வருகிற ஜனவரி 10ஆம் தேதி அதிகாலை 5.15 மணிக்கு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.