ஜனவரி 09,2025
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் பத்தாம் நாளான இன்று உற்சவர் நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் அருள்பாலித்தார். விழாவில் இரத்தினகிளி மாலையுடன் தலையில் நாகாபரணம் பவளமாலை அடுக்குப் பதக்கம் ஏலக்காய் ஜடை தரித்து மூலஸ்தானத்திலிருந்து தங்கப் பல்லக்கில் புறப்பட்டு வெண் பட்டாடை ஒய்யார சாய்வு சவுரிக் கொண்டை கஸ்தூரி திலகம் வலது கரத்திலே இரத்தினங்கள் பதித்த தங்கக் கிளி மார்பிலே திருமாங்கல்யம் முத்து பவள மணிமாலைகள். காலிலே தங்க தண்டைக் கொலுசுக் காப்புகள் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து பெண் வேடமிட்டு "நாச்சியார் திருக்கோலம்" எனப்படும் மோகினி அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி அரையர்கள் இசைத்த தீந்தமிழ் திவ்விய பிரபந்தத்தின் திருமொழி பாசுரங்களை கேட்டவாறு பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.