மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கல் யானைக்கு கரும்பு கொடுத்த லீலை



மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தை மாத பிறப்பையொட்டி சுவாமி சுந்தரேஸ்வரரின் 64 திருவிளையாடல்களில் ஒன்றான கல் யானைக்கு கரும்பு கொடுக்கும் லீலை நேற்று மாலை நடந்தது.


ஒரு சமயம் சுவாமி, அனைவரும் இம்மை மறுமைப் பயன் பெற சித்தர் வேடத்தில் தோன்றி பல சித்து வேலைகளை செய்தருளினார். அவரின் சித்து வேலைகளால் மதுரை மக்கள் தன்னிலை மறந்து கூட்டம் கூட்டமாக அவரிடமே இருந்தனர். இதை அறிந்த மன்னர் அபிேஷகப்பாண்டியன், அரண்மனைக்கு சித்தரை அழைத்து வர ஏற்பாடு செய்தார். இதை அறிந்த சித்தர், மீனாட்சி கோயிலில் யோக தியானத்தில் ஈடுபட்டார். இந்த இடம் சுவாமி சன்னதி சுற்றுப்பாதையில் துர்கை சன்னதி அருகே உள்ளது.


மன்னர் கோயிலுக்கு வந்தார். பாதுகாவலர்கள் சித்தரின் யோகத்தை கலைக்க முற்பட்டு கையை ஓங்கியபோது அவை அப்படியே நின்றன. கண் விழித்த சித்தர், ‘நான்தான் ஆதியும் அந்தமும். இங்குள்ள மக்களுக்கு சித்து விளையாட்டு காட்டி அவர்களுக்கு தேவையான வரத்தை அளித்து வருகிறேன். என் பெயர் எல்லாம் வல்ல சித்தர்’ என்றார். அவர் மேல் நம்பிக்கையில்லாத மன்னர் ‘எல்லாம் வல்ல சித்தர் என்றால், இந்த கரும்பை இங்குள்ள கல் யானையை சாப்பிட செய்யுங்கள்’ என்று கூறி கரும்பை நீட்டினார். சித்தரும் அருகில் இருந்த கல் யானையைப் பார்க்க அது உயிர்ப்பெற்று, மன்னனின் கையில் இருந்த கரும்பை வாங்கி சாப்பிட்டது. உண்மையை உணர்ந்த மன்னன், அவரை அங்கேயே தங்கியிருக்கும்படி வேண்டினார். இந்த லீலையை நினைவூட்டும் விதமாக நேற்று மாலை எல்லாம் வல்ல சித்தர் சன்னதி அருகே கல் யானைக்கு கரும்பு கொடுக்கும் நிகழ்வு நடந்தது.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்