கம்பம்; கம்பம் நந்தகோபாலன் தம்பிரான் மாட்டுத் தொழுவில் நேற்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் திரண்டு பொங்கல் வைத்து பட்டத்து காளையை வழிபட்டனர்.
பசுக்களை தெய்வங்களாக வழிபடும் ஒக்கலிக கவுடர் சமுதாயத்திற்கு சொந்தமானது கம்பம் நந்தகோபாலன் தம்பிரான் மாட்டுத் தொழு. இங்கு கருவறையில் சுவாமி விக்ரங்கள் கிடையாது, கருவறையில் பீடத்தின் மீது உள்ள மரத்திலான ஸ்தம்பம் ஒன்றுக்குத் தான் பூஜை நடைபெறும், ஆண்டுதோறும் தை மாதம் 2 ம் நாள் மாட்டு பொங்கலன்று இங்கு ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் திரள்வார்கள். கம்பம் மட்டுமல்லாது ஒடைப்பட்டி, சிலமலை, காமயகவுண்டன்பட்டி , புதுப்பட்டி, கூடலூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் இங்கு வருவார்கள். ஒக்கலிக கவுடர் சமுதாயத்திற்கு சொந்தமான கோயிலாகும். இங்குள்ள கோசாலையில் நூற்றுக்கணக்கில் மாடுகள் உள்ளன. இங்குள்ள பட்டத்துகாளைக்கு மட்டுமே பூஜை புனஸ்காரங்கள் நடைபெறும். இன்று அதிகாலை முதல் திரண்ட பொதுமக்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து பட்டத்து காளையை வழிபட்டனர். தொடர்ந்து கருவறையில் ஸ்தம்பத்திற்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்று வழிபட்டனர். கோசாலையில் அடைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான காளை மாடுகளுக்கு பொதுமக்கள் பசுந்தீவனம் வாங்கி தந்தனர். கோயில் வளாகத்தில் உள்ள நூற்றுக்கணக்கான தங்களின் குலக்கோயில்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். நூற்றுக்கணக்கான மாலை கோயில்கள் இந்த வளாகத்தில் உள்ளதும் சிறப்பாகும். மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் இருந்து ஒக்கலிக கவுடர் சமுதாயத்தை சேர்ந்தவர்களும் மற்றும் அனைத்து சமூகத்தினரும் திரளாக வந்திருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஒக்கலிக கவுடர் மகாஜன சங்கத்தினர் செய்திருந்தனர். இப்பகுதியில் பிறக்கும் காளை மாடு கன்றுகளை, அனைத்து சமூகத்தினரும் இந்த கோயிலிற்கு தானமாக தருவது இப்பகுதியில் உள்ளவர்கள் காலம் தொட்டு பின்பற்றி வரும் வழக்கமாகும், அது போன்று நேற்றும் கன்றுகள் தானமாக வழங்கப்பட்டது.