பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் மாட்டு பொங்கல் விழாவையொட்டி, அழகர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கனுப்பாரி உற்சவம் நடந்தது.
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் வடக்கு திசை நோக்கி வைகை ஆற்றங்கரையில் உள்ளது. இங்கு மூலவர் பரமஸ்வாமியை ஆண்டு முழுவதும் பரமபத வாசல் வழியாகவே பக்தர்கள் தரிசிக்க செல்கின்றனர். மார்கழி உற்சவங்கள் நடந்த நிலையில், இன்று காலை 9:00 மணிக்கு அழகர் குதிரை வாகனத்தில் அலங்காரமாகினார். பின்னர் 11:00 மணிக்கு புஷ்ப சப்பரத்தில் அமர்ந்து திருவீதி உலா வந்து, கோயிலை அடைந்தார். பெருமாள், கிருஷ்ண அவதாரத்தில் பசு மாடுகளை மேய்க்க சென்றார். இதனை நினைவுபடுத்தும் விதமாக கால்நடைகள் சுபிட்சமாக இருக்க பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளும் லீலை நடத்தப்படுகிறது. தொடர்ந்து வீதிகள் தோறும் பக்தர்கள் தேங்காய் உடைத்து தரிசித்தனர்.