பதட்டமான சூழலில் உத்தப்புரம் முத்தாலம்மன் கோயில் திருவிழா



எழுமலை; எழுமலை அருகே உத்தப்புரம் முத்தாலம்மன் கோயில் திருவிழா நீதிமன்ற உத்தரவுப்படி நடந்த போது பதட்டமான சூழல் ஏற்பட்டது.


மதுரை மாவட்டம் எழுமலை உத்தப்புரம் முத்தாலம்மன் கோயில் வழிபாடு நடத்துவதில் உத்தப்புரத்தில் உள்ள இரு சமூகத்தினர்களிடையே கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இந்த ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழா சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுப்படி, கோயில் வழிபாடு நடத்தும் போது மாற்று சமூக மக்கள் வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது. சர்ச்சைக்குரிய அரசமரத்தைச் சுற்றி தடுப்புகள் அமைத்து போலீஸ் பாதுகாவலுடன் நேற்று இரவு கரகம், முத்தாலம்மன் சிலை, முளைப்பாரி எடுத்து வழிபாடு துவங்கியது. கோயிலில் வழிபாட்டின்போது மாற்று சமூகத்தினரும் வழிபாடு செய்து செல்வதற்கான ஏற்பாடு செய்திருந்தபடி அவர்களும் வந்து வழிபாடு நடத்தினர்.


இன்று காலை ஒரு சமூகத்தினர், சக்தி கிடா வெட்டி பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். மாற்று சமூகத்தினர் நாங்களும் மாலை 3.00 மணிக்கு சக்தி கிடா வெட்டி, பொங்கல் வைக்க கோயிலுக்கு வருவோம் என அறிவித்துச் சென்றனர். இதனால் பதட்டமான சூழல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாலை 4.00 மணிக்கு மேல் எடுக்க வேண்டிய கரகம், முளைப்பாரி கரைக்கும் நிகழ்ச்சியை முன்னதாக நடத்தினர். கோயில் வளாகத்தில் இருந்து கரகம், முளைப்பாரி, முத்தாலம்மன் சிலைகள் எடுத்து வெளியேறியதைத் தொடர்ந்து அதிகாரிகள் கோயிலை பூட்டினர். மாற்று சமூகத்தினர் தங்கள் பகுதியில் இருந்து கோயில் வளாகத்தில் பொங்கல் வைக்க வேண்டும் என பொங்கல் பானையுடன் ஊர்வலம் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசார்களுடன் ஊர்வலமாக வந்தவர்கள் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். பேரையூர் தாசில்தார் செல்லப்பாண்டி அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். நீதிமன்ற உத்தரவின் பேரில் வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டது. நீங்களும் வழிபாடு செய்தீர்கள். இந்த நிலையில் சட்ட ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டு கோயில் வளாகத்திற்குள் பொங்கல் வைக்க அனுமதி வழங்க முடியாது என தெரிவித்தார். மேலும், தற்போது வழிபாடு முடிந்து கோயில் பூட்டப்பட்டது. மற்ற உரிமைகள் குறித்து நீதிமன்றம் மூலமாக தீர்வு காணுங்கள் என தெரிவித்தார். இருந்த போதும் நீதிமன்ற உத்தரவை மீறி எங்களை சக்தி கிடா வெட்டு, பொங்கல் வைக்க விடாமல் போலீசார், வருவாய்த்துறையினர் தடுத்து நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளீர்கள் என தரையில் அமர்ந்து கோஷமிட்டனர். நாங்கள் வந்த போது போலீசார், வருவாய்த்துறையினர் தடுத்தனர் என்பதை பதிவு செய்வதற்காகத்தான் நாங்கள் வந்தோம். கிடா வெட்டி பொங்கல் வைத்து வழிபாடு செய்வதற்கான உரிமையை நீதிமன்றம் சென்று தீர்வு காண்போம் என அறிவித்துச் சென்றனர்.


இந்த கோயில் வழிபாடு அமைதியாக நடத்துவதற்காக தென்மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த சின்கா, டி.ஐ.ஜி., அபினவ்குமார், எஸ்.பி., அரவிந்த், உசிலம்பட்டி டி.எஸ்.பி., சந்திரசேகர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார், உசிலம்பட்டி ஆர்டிஓ, சண்முக வடிவேல், பேரையூர் தாசில்தார் செல்லப்பாண்டி உள்ளிட்டோர் உத்தப்புரத்தில் முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்