தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் வெள்ளியங்கிரி ஆண்டவர் வழிபாட்டு குழு சார்பில், மழை வேண்டி வேள்வி நடந்தது.
தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் வெள்ளியங்கிரி ஆண்டவர் வழிபாட்டு குழு சார்பில், மழை வேண்டி பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், சிறப்பு வேள்வி நேற்று நடந்தது. காலை, 8:00 மணிக்கு, விநாயகர் வேள்வி வழிபாட்டுடன் துவங்கியது. நீலி வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் இருந்து, 108 தீர்த்த குடங்கள் கொண்டுவரப்பட்டு, வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மழை வேண்டி வேள்வியை, பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார் மற்றும் சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் நடத்தினர். இதில், விவசாயிகள் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர். வேள்வி முடிந்த சில மணி நேரத்திலேயே, பூண்டி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில், திடீரென கனமழை பெய்தது.