மீண்டும் வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்; தரிசித்து பக்தர்கள் பரவசம்



மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் தடம்பார்க்கும் நிகழ்வு நடைபெற்றது. இன்று வைகை ஆற்றில் மீண்டும் எழுந்தருளிய கள்ளழகரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், பச்சைப்பட்டு உடுத்தி, கடலென திரண்ட பக்தர்களின், கோவிந்தா கோஷம் விண்ணை பிளக்க, வைகை ஆற்றில் 12ம் தேதி காலை எழுந்தருளினார். திருவிழாவின் ஒரு பகுதியாக மண்டூக மகரிஷிக்கு கள்ளழகர் சாப விமோசனம் அளிக்கும் நிகழச்சி நடந்தது. இதனை முன்னிட்டு சேஷ வாகனத்தில் புறப்பட்ட கள்ளழகர், வண்டியூர் வைகை ஆற்றில் உள்ள தேனூர் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு தேனூர் கிராமத்தவருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு நடந்தது. இதையடுத்து கள்ளழகர் கருட வாகனத்தில் எழுந்தருளி, மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து கருட வாகனத்தில் பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளிய கள்ளழகர், நேற்று இரவு ராமராயர் மண்டபத்துக்கு வந்தார். அங்கு விடிய விடிய தசாவதார அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து இன்று 14ம் தேதி ராமராயர் மண்டகப்படியிலிருந்து அனந்தராயர் பல்லக்கில் ராசாங்க திருக்கோலத்தில் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்திற்கு புறப்பட்டு, வைகை ஆற்றில் மீண்டும் எழுந்தருளினார் கள்ளழகர். கள்ளழகரை ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். நாளை அதிகாலையில் பூப்பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் கருப்பணசாமி சந்நிதியில் வையாளியாகி மலைக்கு திரும்புகிறார். மே 16ல் அப்பன்திருப்பதி, கள்ளந்திரி வழியாக கோயிலை அடைகிறார். மே 17ல் உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்