சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன தரிசன திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து வழிபட்டனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக சிதம்பரம் விளங்குகிறது சிதம்பரம் நடராஜப் பெருமாளுக்கு வருடத்தில் ஆறு முறை மகா அபிஷேகம் நடைபெறும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மகாபிஷேகம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக 9ம் நாள் விழாவான தேர் திருவிழா இன்று ஜூலை 1ம் தேதி நடைபெற்றது. இதனையொட்டி அதிகாலை சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைப்பெற்று சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. சுவாமி சித்சபை ரதயாத்திராதானம் நிகழ்ச்சியைதொடர்ந்து தேவாரம் திருவாசகம் பாட, மேளதாளங்கள், வானவேடிக்கையுடன் சுவாமி புறப்பாடு செய்து, தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியருளினார். தேரில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், மகா தீபாராதனைகள் நடக்கப் பெற்று, பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். முதல் தேராக விநாயகர், முருகர் தேரை தொடர்ந்து நடராஜர் சுவாமி, சிவகமாசுந்தரி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் தேர் சென்றது. நடராஜர் சுவாமி மற்றும் சிவகாமசுந்தரி அம்மனுக்கு வீதிகளில் மண்டகப்படிதாரர்கள் வீட்டின் முன்பு நின்று சிறப்பு தீபாராதனைகளுடன் தேரோட்டம் நடந்தது. நான்கு வீதிகளில் தேர் வலம் வந்தது.
பின்பு மதியம் 2 மணி அளவில் தெற்கு சன்னதியும் கீழ சன்னதியில் சந்திக்கும் இடத்தில் நடராஜா பெருமானின் தேரை நிறுத்தி விடுவார்கள். மாலை 4 மணிக்கு மேல் மீனவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நடராஜ பெருமான் எங்களது மாப்பிள்ளை என்று சன சீர்வரிசையுடன் வந்து நடராஜர் பெருமானுக்கு படைத்த உடன் தான் அங்கிருந்து தேர் கிளம்பி மாலை 6 மணி அளவில் கீழ வீதியில் வந்து சேரும் பின்பு ஒன்பது மணி அளவில் சுவாமியும் அம்பாளும் நடனம் ஆடியப்படியே தேரிலிருந்து இறங்கி பொதுமக்களுக்கு காட்சி கொடுத்து ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜபெருமானும் சிவகாமசுந்தரிக்கு இரவு முழுவதும் மகா அபிஷேகங்கள் நடைபெறும். மறுநாள் நாளை (2ம் தேதி)மதியம் 2 மணி அளவில் ஆனி திருமஞ்சன தரிசனம் நடைபெறும்.