உத்தரகோசமங்கை; மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சீரடியைச் சேர்ந்த சன்னியாசி சைக்கிள் மூலமாக 108 சக்தி பீடங்களை தரிசனம் செய்வதற்காக இதுவரை 17,800 கி.மீ., பயணம் செய்து வந்துள்ளார். இன்று காலை 11:00 மணிக்கு உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு தனது சைக்கிள் யாத்திரையை தொடர்ந்தார். சீரடியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் 60, சன்னியாசியான இவர் சைக்கிள் மூலமாக இந்தியாவில் உள்ள 108 சக்தி பீடங்களையும் தரிசனம் செய்ய முடிவு செய்து கடந்த 2023 ஜன., 23 அன்று மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் இருந்து தனது புனித யாத்திரையை துவக்கினார்.
இது குறித்து சன்னியாசி ராதாகிருஷ்ணன் கூறியதாவது: சைக்கிளில் நாள் ஒன்றுக்கு 70 முதல் 75 கி.மீ., தூரம் பயணிக்கிறேன். செல்லும் இடங்களில் உள்ள கோயில், ஆசிரமம், விடுதி உள்ளிட்டவைகளில் ஓய்வெடுத்துக் கொண்டு மீண்டும் சைக்கிளில் பயணம் செய்கிறேன். கடந்த 2023ல் துவங்கிய எனது யாத்திரை மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல பிரதேஷ், ஹரியானா, பஞ்சாப், டெல்லி, உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், நேபாளம், பீகார், அஸ்ஸாம், மேகாலயா திரிபுரா உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக தமிழ்நாடு வந்தடைந்து இன்று ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு உத்தரகோசமங்கை வழியாக தூத்துக்குடி, கன்னியாகுமரி செல்ல உள்ளேன். பின்னர் மைசூர், சீரடி, மத்திய பிரதேசத்தில் எனது புனித யாத்திரையை நிறைவு செய்கிறேன். சைக்கிளில் சென்று 108 சக்தி பீடங்களை தரிசனம் செய்வது உடலுக்கும், உள்ளத்திற்கும் பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது எனக் கூறியவாறு சைக்கிளில் செல்ல துவங்கினார்.