ஸ்ரீபெரும்புதுார்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், வரும் 7ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளதையொட்டி, இன்று முதல் யாக பூஜை துவங்குகிறது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டை முருகன் கோவில் அமைந்துள்ளது. 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இக்கோவிலில், ஏழு அடி உயரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகபெருமான் அருள்பாளிக்கிறார். இக்கோவிலில், 2008ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இந்த நிலையில், கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த அறநிலைத் துறையினரால் முடிவெடுக்கப்பட்டு, 1.50 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து, 17 ஆண்டுகளுக்கு பின், இம்மாதம் 7ம் தேதி, காலை 10:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 60 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, 108 சிவாச்சாரியார்களும், 9 ஓதுவார்களும் இணைந்து இன்று மாலை, முதல் நாள் யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன. அதை தொடர்ந்து சனிக்கிழமை முதல், திங்கட்கிழமை காலை வரை யாக சாலை பூஜைகள் நடைபெறும். அதை தொடரந்து, வரும் 7ம் தேதி, காலை 9:00 மணி முதல், -10:30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. பக்தர்களின் வசதிக்காக 40 ‘மொபைல் டாய்லெட்’ வசதி, குடிநீர் வசதி, பேரிகேட் தடுப்பு உள்ளிட்ட வசதிகள் கோவில் நிர்வாகம் மூலம் செய்யப்பட்டுள்ளன.