செல்லாண்டியம்மன் திருத்தேர் விழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு



பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வெள்ளமடையில் செல்லாண்டியம்மன் திருத்தேர் விழா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


பெரியநாயக்கன்பாளையம் அருகே எஸ்.எஸ். குளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெள்ளமடை கிராமத்தில் செல்லாண்டியம்மன், பெருமாள், விளையாட்டு மாரியம்மன், கருப்பராயன், கன்னிமார் சாமி திருக்கோயில்கள் உள்ளன. இதில் செல்லாண்டி அம்மன் திருத்தேர் விழா கடந்த, 28ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, யாகசாலை பூஜை, மகா அபிஷேகம் நடந்தன. 29ம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியும், 30ம் தேதி கன்னிமார் பூஜை, விளையாட்டு மாரியம்மனுக்கு மகா அபிஷேகம், மாயவர் பெருமாள் பூஜை நடந்தது. ஜூலை, 1ம் தேதி சீர் கொண்டு வருதல், அம்மன் அழைப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று அதிகாலை சக்தி கரகம் புறப்பாடு, மதியம் மகா அபிஷேகம், அன்னதானம் நடந்தது. மாலை திருத்தேர் வடம் பிடித்தல், திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று காலை மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியும், மதியம் கருப்பராயன் பூஜை நடந்தது. நாளை காலை செல்லாண்டியம்மன் ஊஞ்சல் வசந்த உற்சவம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்