தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சண்முகர் விமானத்தில் தங்கத் தகடுகள் பதிக்கப்பட்ட கலசம் இன்று பொருத்தப்பட்டது.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடமுழுக்கு ஜூலை 7ஆம் தேதி நடக்கிறது. இதையொட்டி ராஜகோபுரம் அருகே 8000 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 76 குண்டங்கள் அமைக்கப்பட்டு, சண்முகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு ஆயிரம் கும்பங்கள் வைத்து யாகசாலையில் பூஜை செய்யப்பட்டு வருகிறது. யாகசாலை பூஜை 7 நாட்கள் தினமும் காலை மாலையில் நடைபெறுகிறது, நேற்று 4ம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, இன்று சண்முகர் விமானத்தில் தங்கத் தகடுகள் பதிக்கப்பட்ட கலசம் பொருத்தப்பட்டது. 7ம் தேதி அதிகாலை வரை யாகசாலை பூஜைகள் நடைபெறும். அன்று காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் ராஜகோபுர விமான கலசங்கள், சுவாமி மூலவர், சண்முகர், ஜெயந்திநாதர், நடராஜர், குமரவிடங்கபெருமான் மற்றும் பரிவார மூர்த்திகள் விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடாக கடற்கரையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.