தொண்டாமுத்தூர்; கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்த குரு பவுர்ணமி விழாவில், ஏராளமான பொதுமக்கள் பால்குடம் எடுத்து வந்து தியானலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தனர்.
ஆதியோகியான சிவன், சப்தரிஷிகளாக தனது ஏழு சீடர்களுக்கு, பௌர்ணமி நாளில், தென்திசை நோக்கி அமர்ந்து யோக அறிவியலை வழங்கினார். உலகில் அந்த நாளில்தான் முதலாவது குரு அவதரித்ததாக கருதப்படுகிறது. அந்நாளை, குரு பவுர்ணமி தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், இந்தாண்டு குரு பவுர்ணமி தினமான நேற்று, ஈஷா யோகா மையத்தில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு முன்னிலையில், குரு பவுர்ணமி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, ஈஷா வளாகம் முழுவதும், பூமாலை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. குரு பவுர்ணமியை முன்னிட்டு, நூற்றுக்கணக்கான உள்ளூர் கிராம மற்றும் பழங்குடி மக்கள், ஈஷா தன்னார்வலர்களுடன் இணைந்து, ஆதியோகி முதல் தியானலிங்கம் வரை பால் குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். தியானலிங்கத்தில், பொதுமக்கள் தங்களின் கைகளாலே அபிஷேகம் செய்தனர். மாலையில், சத்குருவின் அருளுரை மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடந்தது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் இதில் பங்கேற்றனர். இசை நிகழ்ச்சியில், மோஹித் சவுக்கான், பார்த்திவ் கோஹில் உள்ளிட்ட தலைசிறந்த இசைக் கலைஞர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில், 103 இடங்களில் சத்குருவின் சத்சங்கம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.