திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 14 ஆண்டுகளுக்கு பின்பு நாளை அதிகாலை 5:25 மணி முதல் காலை 6:10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
கோயிலில் ரூ. 2.37 கோடியில் திருப்பணிகள் நிறைவடைந்து கும்பாபிஷேகத்திற்காக ஜூலை 10 துவங்கிய யாகசாலை பூஜையில் இன்று மாலை 7ம் கால பூஜை நடந்தது. நேற்று இரவு மூலவர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. நாளை (ஜூலை 14) அதிகாலை 3:00 மணிக்கு மங்கள இசை முடிந்து விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசமாகி அதிகாலை 3:45 மணிக்கு 8ம் கால யாகசாலை பூஜை பூர்த்தி செய்யப்படுகிறது. தீபாராதனை முடிந்து காலை 4:30 மணிக்கு யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய தங்கம், வெள்ளி குடங்கள் யாகசாலையிலிருந்து கோபுரங்களுக்கு புறப்பாடாகிறது. அதிகாலை 5:25 மணியிலிருந்து காலை 6:10 மணிக்குள் ராஜகோபுரம், வல்லபக்கணபதி விமானம், கோவர்த்தனாம்பிகை அம்பாள் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. அதே நேரத்தில் பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. மூலவர்களுக்கு மகா அபிஷேகம் முடிந்து தீபாராதனை நடைபெறும். பின்பு மூலவர்களை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். வழக்கமாக மதியம் ஒரு மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட்டு மீண்டும் மாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்படும். இன்று மதியம் நடை அடைப்பு இல்லை. கும்பாபிஷேகம் முடிந்தவுடன் கோயிலுக்குள் சுவாமி தரிசனம் செல்லும் பக்தர்கள் சிரமம் இன்றி எளிதில் சுவாமி தரிசனம் முடித்து திரும்புவதற்காக இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
சிறப்பு ஏற்பாடுகள்: கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை காண நகரின் 26 இடங்களில் மெகா எல்.இ.டி., டிவிக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. கோயிலுக்குள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. பத்து ட்ரோன்கள் மூலம் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கவும், பக்தர்கள் பாதுகாப்பிற்காக மூன்று ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அமைச்சர் மூர்த்தி சார்பில் திருமண மண்டபங்களில் நான்கு லட்சம் பக்தர்களுக்கு உணவுகள் வழங்கப்பட உள்ளது. பத்து இடங்களில் முதலுதவி மையங்கள், நடமாடும் கழிப்பறைகள், நகரின் அனைத்து பகுதிகளிலும் கிரிவல ரோட்டிலும் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் காண வரும் பக்தர்களுக்கு மஞ்சள் கிழங்கு, மஞ்சள் கயிறு, மூலவர் படம், விபூதி, இனிப்புகள் கொண்ட தாம்பூல பிரசாத பைகள் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா சார்பில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது. கும்பாபிஷேக முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் பிரவீன் குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கோயில் அஸ்தான மண்டப தூணில் சுப்பிரமணிய சுவாமிக்கு தெய்வானையை தேவேந்திரன் தாரை வார்த்து கொடுக்கும் கருங்கல் சுவாமி சிலைகள் உள்ளன. அங்கு முன்பு சுவாமிகளின் பாதி அளவு கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டிருந்தது. இதனால் பக்தர்கள் முழுமையாக சுவாமி தரிசனம் முழுமையாக செய்ய முடியவில்லை. அங்கு தற்போது கோபுரம் போன்று மரத்தினால் பொருத்தப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் வருகை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்காக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடை நேற்று திருப்பரங்குன்றம் கோயிலுக்கு வந்தனர்.
நாளை கும்பாபிஷேகம் முடிந்து மாலை ஆறு முப்பது மணிக்கு திருப்பரங்குன்றம் சுவாமிகள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடை வழி அனுப்பும் நிகழ்ச்சியை நடக்கிறது. பின்பு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, சத்யகிரீஸ்வரர், பிரியாவிடை, கோவர்த்தனாம்பிகை அம்பாள் வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.