மயிலாடுதுறை; திருவெண்காடு கோவிலில் இன்று நடந்த பட்டினத்தார் சிவபூஜை செய்யும் நிகழ்வில் திரளான காரைக்குடி பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா பல்லவனத்தில் சவுந்தரநாயகி சமேத பல்லவனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம். தீவிர சிவபக்தரும், புலவருமான பட்டினத்தார் அவதரித்த ஸ்தலமானதால் இங்கு தனி பட்டினத்தாருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் 10 நாள் குருபூஜை விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு குருபூஜை விழா கடந்த 29ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி ஆகஸ்ட் 9ம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு நேற்று திருவெண்காட்டில் ஞான கலாம்பிகையுடன் எழுந்தருளிய பட்டினத்தார். மணிகர்ணிகை ஆற்றில் நீராடி திருவெண்காடு கோவிலில் சிவதீசை பெரும் நிகழ்வும் அதனைத் தொடர்ந்து மூன்றாம் திருநாளான இன்று பட்டினத்தார் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ள முக்குலத்தில் நீராடும் நிகழ்வு நடந்தது. அப்போது பட்டினத்தாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து சுவாமி சன்னதியில் பட்டினத்தார் மரகத மற்றும் ஸ்படிக லிங்கத்திற்கு சிவ பூஜை செய்யும் நிகழ்வு நடந்தது. பூஜையை கோவில் சிவாச்சாரியார்கள் செய்து வைத்தனர். இதில் பட்டினத்தாரை குலதெய்வமாக வணங்கும் காரைக்குடி நகரத்தார் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இரவு பல்லவனம் கோவிலில் பட்டினத்தார் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. முக்கிய விழாவான குருபூஜை விழா ஆகஸ்ட் 7ஆம் தேதி நடைபெறுகிறது.