திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயிஅம்மன் கோயிலில் மூன்றாம் ஆடி வெள்ளியை முன்னிட்டு பெண்கள் மஞ்சள் அரைத்து அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது.
இக்கோயிலில் அம்மனை சாந்தப்படுத்தும் விதமாக மஞ்சள் அரைத்து மூலவருக்கு சாற்றும் விழா ஆடி மாதத்தில் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி 3வது வெள்ளிகிழமையன்று இவ்விழா நடைபெறுவது வழக்கம். இன்று காலை 8:00 மணிக்கு திருப்புத்தூர்,தம்பிபட்டி, தென்மாப்பட்டு,புதுப்பட்டி பகுதி பெண்கள் ஏராளமானோர் கோயில் வளாகத்தில் அம்மியில் பச்சை மஞ்சள் அரைக்க துவங்கினர். காலை 11:00 மணிக்கு அரைத்த மஞ்சளை மூலவர் பூமாயிஅம்மன் உள்ளிட்ட சப்தமாதர்களுக்கு சாற்றப்பட்டது. பின்னர், பால், சந்தனம், தயிர், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களாலும், குங்குமம், அரைத்த மஞ்சளாலும் அபிஷேகம் நடந்தது. பின்னர் சர்வ அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. அம்மனுக்கு சாற்றப்பட்ட மஞ்சள்,குங்குமம்,வளையல் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. ஏற்பாட்டினை வசந்தப்பெருவிழா குழுவினர் செய்தனர்.