காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் பொய்கை ஆழ்வார்குளத்தில் வளர்ந்துள்ள புல், செடி, கொடிகளை அகற்றி சீரமைக்க வேண்டும் என, பக்தர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது. காஞ்சிபுரம், யதோக்தகாரி பெருமாள் கோவிலுக்கு சொந்தமான தெப்பகுளம், கோவில் அருகில் உள்ளது. பொய்கை ஆழ்வார் இக்குளத்தில் அவதரித்ததால், பொய்கை ஆழ்வார் குளம் என அழைக்கப்படுகிறது. பராமரிப்பு இல்லாத இக்குளத்தை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, சென்னை பெட்ரோபேக் ஆயில் அண்ட் கேஸ் நிறுவனத்தின், இயற்கை பாதுகாப்பு மற்றும் மேம்படுத்துதல் திட்டம் மற்றும் எக்ஸ்னோரா இயற்கை சூழல் பாதுகாப்பு அமைப்பு சார்பில், 17.8 லட்சம் ரூபாய் செலவில், கடந்த ஆண்டு குளம் சீரமைக்கப்பட்டது. இந்நிலையில், கோடை வெயில் காரணமாக, இரு மாதங்களுக்கு முன் குளம் வற்றியது. தற்போது, குளத்தில் செடி, கொடி, புற்கள் வளர்ந்துள்ளதால், நீர்பிடிப்பு குறைந்து வருகிறது. எனவே, வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன், காஞ்சிபுரம் பொய்கை ஆழ்வார் குளத்தில் வளர்ந்துள்ள புல், செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என, பக்தர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.