தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்,விஜேந்திரசுவாமி மடத்து தெருவில், சாரங்பாணி கோவிலுக்கு செந்தமான இடத்தினை உதயகுமார் என்பவர், வாடகைக்கு எடுத்து, கடந்த பல ஆண்டுகளாக பள்ளிக்கூடம் நடத்தி வந்தார். மேலும், அந்த இடத்துக்கான வாடகையை பல ஆண்டுகளாக கொடுக்காமல் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், கோவில் இடத்துக்கான வாடகை தொகை செலுத்த கோரி, உதயகுமாருக்கு பலமுறை அறநிலையத்துறை சார்பில், நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், உதயகுமார், அந்த நோட்டீசை, எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், கோவில் இடத்திற்கான வாடகையை செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது. இதனால், பள்ளியை வேறு இடத்திற்கு மாற்றி விட்டு, வாடகையை கோவில் நிர்வாகத்திற்கு செலுத்தாமல் மீண்டும் இருந்த வந்தார். இதையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில், ஹிந்து சமய அறநிலையத்துறை மயிலாடுதுறை இணை கமிஷனர் மூலம், மீண்டும் நீதிமன்றத்தில், கடந்த 2024ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் விசாரணையில், வாடகைதாரரை வெளியேற்றி விட்டு, கோவில் இடத்தை மீட்க உத்தரவிட்டது. இந்த உத்தரவின் பேரில், அறநிலையத்துறை கும்பகோணம் உதவி கமிஷனர் ராமு தலைமையில், சரக இன்ஸ்பெக்டர் வெங்கடசுப்பிரமணியன், செயல் அலுவலர் சிவசங்கரி உள்ளிட்டோர், போலீசார் பாதுகாப்புடன், 7 ஆயிரத்து 315 சதுர அடி கோவில் இடத்தை சுவாதீனம் செய்து, அறிவிப்பு பலகையை வைத்தனர். மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு சுமார் ஏழு கோடி ரூபாய் என அறநிலையத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.