சேவூர் கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவிலில் வரும் 30ல் கும்பாபிஷேகம்



அவிநாசி; சேவூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலில், வரும் 30ம் தேதி கும்பாபிஷேகம், நடைபெறுகிறது.


சேவூரில், 1300 வருடங்களுக்கும் மேலான பழமை வாய்ந்ததாக போற்றப்படும் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக மராமத்து திருப்பணிகள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கிபி 12-ம் நூற்றாண்டுக்கு முன்பு,கொங்குச் சோழர்களால் இக்கோவில் கட்டுமானம் கட்டப்பட்டதாக வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றது. அதன்பின்னர் கொங்கு பாண்டியர்கள் காலத்தில், வட பரிசர நாட்டின் "செம்பியன் கிழாநதி நல்லூர் என அழைக்கப்பட்டது. அக்கால சங்கப் புலவர் குழந்தையின் தகவல் படி ஆறை நாடு என்றும், இப்போது உள்ள சேவூரை சுற்றியுள்ள இடங்களை செம்பை எனவும் அழைக்கப்பட்டதாக கல்வெட்டுகளில் கூறப்படுகிறது. அதன் பின்னர்,பாண்டியர்களின் கல்வெட்டுகள் கூற்றுப்படி 14ம் நூற்றாண்டை சேர்ந்த சுந்தரபாண்டியனின் ஆட்சியில் சேவூரை சுந்தரபாண்டியர் விண்ணகரம் எனவும்,கிபி 13 மற்றும் 14ம் நூற்றாண்டில் சோழர்கள் மற்றும் பாண்டியர்களால் இக்கோவிலுக்கு அணையா தீபங்களுக்காகவும், பூஜைகளுக்காக தேங்காய்கள், பழங்கள், நெய்வேத்தியம் செய்வதற்கும் பொற்காசுகள் வழங்கப்பட்டதாக கல்வெட்டுகளில் சான்றுகள் உள்ளது. 


தற்போதுள்ள பலிபீடம் 14ம் நூற்றாண்டின் ஹொய்சல மன்னர் மூன்றாம் வீரவல்லாலன் காலத்தில் தென்னவத்தராயன் என்ற விக்ரம கண்ணப்பனால் கட்டப்பட்டது என சான்று உள்ளது. சோழர்களும், பாண்டியர்களும் வழிபட்டு வந்த புராதனமிக்க இக்கோவிலில்,முறையான பராமரிப்பு இல்லாததால் கடந்த 2002ம் ஆண்டு, வசந்த மண்டபம் பகுதியில் உள்ள கற்கள் பெயர்ந்து விழுந்தது. இதனால் முற்றிலும் இடிந்து விழும் நிலை ஏற்பட்டதை தொடர்ந்து ஹிந்து சமய அறநிலையத்துறையினரால் கும்பாபிஷேக திருப்பணிகளுக்காக பாலாலயம் நடைபெற்றது. இந்நிலையில் 2003ம் ஆண்டு கும்பாபிஷேக திருப்பணி வேலைகள் அறநிலையத்துறை சார்பில் உபயதாரர்கள் வழங்கிய நிதி மூலம் துவங்கப்பட்டது. அதில் மூலஸ்தானம், அர்த்தமண்டபம், மகா மண்டபம், அம்மன் சன்னதிகள், சுற்றுச்சுவர், மேல்நிலை நீர் தொட்டி, தீபஸ்தம்பம் ஆகியவை புதியதாக கட்டப்பட்டது. இதற்கிடையில் நிதி பற்றாக்குறையால் திருப்பணிகள் பாதியில் நின்றது. அதன் பின்னர் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடர்ந்து நடைபெற்றிட சுதர்ஷன ஹோமம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து, சொர்க்கவாசல் அமைத்து மதில் சுவர் கட்டுதல்,முகப்பு தோரண வாயில் அமைத்து மதில் சுவர் கட்டுதல்,கோவில் வளாகத்திற்குள் நடைபாதை கல் தளம் அமைத்தல், மூலவர் விமானம், மகாலட்சுமி விமானம், ஆண்டாள் விமானம், பஞ்சவர்ணம் தீட்டுதல், மகா மண்டபம் முன்பு ஓட்டுக்கரை மண்டபம் அமைத்தல், புதிய மடப்பள்ளி அமைத்தல் ஆகிய கும்பாபிஷேக மராமத்து திருப்பணிகளை,உபயதாரர்கள் மூலம் ஹிந்து சமய அறநிலையத் துறையினர் மேற்கொண்டனர்.


தற்போது கும்பாபிஷேக திருப்பணி மராமத்து வேலைகள் முழுமையாக முடிந்து,கடந்த 2ம் தேதி கும்பாபிஷேகத்திற்காக யாகசாலை அமைக்கும் பணிக்காக முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. வரும் 30ம் தேதி காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர், ஹிந்து சமய அறநிலைத்துறையினர்,பொதுமக்கள் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்