மதுரை: ‘‘தர்மத்தின் வழியில் கிடைக்கும் சந்தோஷமே நிரந்தரம்,’’ என, மதுரையில் தினமலர் நாளிதழ் இணை இயக்குநர் ஆர்.லட்சுமிபதி தெரிவித்தார்.
மதுரையில் சின்மயா மிஷன் சார்பில் மாநில அளவிலான சின்மய கீதை ஒப்புவித்தல் போட்டி நடந்தது. டி.ஏ.ஜி., குழும நிர்வாக இயக்குநர் ரகுராம் துவக்கி வைத்தார். சின்மயா மிஷன் மாநில தலைவர் சுவாமி ஸ்ரீதரானந்தா ஆசி வழங்கினார். மாநிலம் முழுதும் 17 மையங்களில் மாவட்ட போட்டிகளில் வென்ற 306 மாணவர்கள், 6 பிரிவுகளாக பங்கேற்றனர். நிரந்தர சந்தோஷம் நிறைவு விழாவில் தினமலர் நாளிதழ் இணை இயக்குநர் ஆர்.லட்சுமிபதி பேசியதாவது: நம்மைச் சுற்றி நுாறு ஆண்டுகளைக் கடந்த மரங்கள் பல உள்ளன. அவை வெயில், மழை, புயலைக் கடந்து நிலைத்திருக்க காரணம் பலமான, ஆழமான வேர்கள். அதுபோல நம் பாரம்பரியம், கலாசாரத்தில் உறுதியுடன் இருந்தால் எவ்வகை பிரச்னையையும் சமாளித்து விடலாம். தேர்வு, போட்டி உள்ளிட்டவற்றில் ஜெயிப்பது, ஆசைப்பட்ட பொருட்கள் வாங்குவது உள்ளிட்டவற்றில் கிடைக்கும் சந்தோஷம் தற்காலிகமானதே. எதுவும் நிரந்தரமல்ல என கிருஷ்ணர் கூறுகிறார். எனவே அவற்றுள் மனதை லயிக்க விடாமல், தர்மத்தின் வழியில் நடக்கும்போது கிடைக்கும் சந்தோஷமே நிரந்தரம். இதை மனதில் வைத்துக் கொண்டால் வாழ்வில் பல விஷயங்களை வெல்ல முடியும். கீதையை, அதன் அர்த்தம் புரிந்து பாராயணம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மலை, நதி வழிபாடு சின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்தா பேசுகையில், ‘‘மலை, நதி என அனைத்தையும் இறைவனாக வழிபடுகிறோம். வெற்றி, தோல்வியை சமமாக கருதுபவர்கள் வாழ்வில் வெற்றி பெறுவர். வாழ்வை முழு அர்த்தத்துடன் வாழ கீதையை படிக்க வேண்டும்,’’ என்றார். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆறு பிரிவுகளிலும் முதல் 2 இடங்களை வென்ற 12 மாணவர்கள் நவ., 29, 30ல் புனேவில் நடக்கும் தேசிய போட்டிக்கு தகுதி பெற்றனர். சென்னை மையம் சாம்பியன் கோப்பையை வென்றது. சுவாமி ஜித்தேஷ் சைதன்யா, அறங்காவலர்கள் ராமச்சந்திரன், ஜெயபிரதீப் ஜியோதிஸ், திலகர், மதுரை மையத் தலைவர் திருமலையப்பன், ஒருங்கிணைப்பாளர்கள் ஹரி ஷியாம், வித்யா உட்பட பலர் பங்கேற்றனர்.