பொள்ளாச்சி: பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், லட்சுமி ஹயக்ரீவர் ஐம்பொன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
பொள்ளாச்சியில், 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு முதல் முறையாக மாணவர்களின் கல்விக்கு உறுதுணையாகவும், வழிகாட்டியாக இருக்கும் லட்சுமி ஹயக்ரீவர் ஐம்பொன் சிலை வடிவமைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நேற்று முன்தினம் சைனாதி வாசம், ஜனாதிவாசம், கலசஸ்தாபனம், சாற்றுமுறை நடைபெற்றன. தொடர்ந்து, நேற்று காலை கோ பூஜை உடன் பூஜைகள் துவங்கின. பஞ்ச சுத்த ேஹாமம், நியாச ேஹாமம், கலச அபிேஷகம், லட்சுமி ஹயக்ரீவர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு ஒன்பது கலசங்கள் வைத்து பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, 10 வகையான திரவியங்களை கொண்டு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. கோவில் வளாகத்தில் லட்சுமி ஹயக்ரீவர் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. அறங்காவலர் குழு தலைவர் மணி மற்றும் அறங்காவலர்கள் பங்கேற்றனர். ‘கல்வி அவதாரமாக விளங்கும் பெருமாள் லட்சுமி ஹயக்ரீவரிடம், மாணவர்கள், நோட்டு, பேனா, கல்வி உபகரணங்களை வைத்து, 12 முதல், 108 முறை ஹயக்ரீவர் சாஸ்திர நாம மந்திரத்தை சொல்லும் போது, கல்வித்திறன் அதிகரிக்கும் என்பது ஐதீகம். பொள்ளாச்சியில் முதல் முறையாக ஹயக்ரீவர் ஐம்பொன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.