சொந்த வீடு கட்ட அருள்புரியும் வராஹநாத சுவாமி



ஒவ்வொருவருக்கும் சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், சிலருக்கு மட்டுமே அந்த கனவு நிறைவேறும். சொந்த வீடு கட்டும் ஆசை இருந்தால், மாண்டியாவில் உள்ள புராதன கோவிலுக்கு சென்று தரிசனம் செய்யுங்கள்.


கர்நாடகாவின் பெங்களூரு, மங்களூரு, மைசூரு உட்பட அனைத்து மாவட்டங்களிலும், பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளன; அவை பக்தர்களை ஈர்க்கின்றன. ஒவ்வொன்றும் தனித்தனி சிறப்பு உடையவை. இவற்றில் மாண்டியாவில் உள்ள வராஹநாத சுவாமி கோவிலும் ஒன்றாகும். இங்கு தரிசனம் செய்தால், நிலம் தொடர்பான வழக்குகள் முடியும்; சொந்த வீடு கட்டும் விருப்பம் நிறைவேறும் என்பது ஐதீகம்.


பொறியாளர்களுக்கு சவால் மாண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட் தாலுகாவில் உள்ள வராஹநாத கல்லஹள்ளி கிராமத்தில், வராஹநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. மஹாவிஷ்ணுவின் அவதாரமான வராஹநாத சுவாமி இங்கு குடி கொண்டுள்ளார். ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மிகவும் அற்புதமான கலை நயத்துடன், இன்றைய கட்டடக்கலை பொறியாளர்களுக்கு சவால் விடும் வகையில், கோவில் அற்புதமான கலை நுணுக்கங்களுடன் காணப்படுகிறது.


மாதந்தோறும் ரேவதி நட்சத்திர நாளன்று, சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. 108 விதமான திரவியங்கள், மலர்களால் வராஹநாத சுவாமிக்கு அபிஷேகம் நடக்கிறது; அலங்காரமும் செய்யப்படுகிறது. வராஹ ஜெயந்தியன்று சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. அன்றைய தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர்.


மண், செங்கல் சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை உள்ளவர்கள், நில வழக்குகளால் அவதிப்படுவோர், இந்த கோவிலுக்கு வந்து, வராஹசுவாமியை தரிசனம் செய்தால், சொந்த வீடு கட்டும் கனவு நிறைவேறும். நில வழக்குகள் முடிவடையும் என்பது ஐதீகம். இதனால், வெளிமாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். தங்கள் வேண்டுதல் நிறைவேற மண், செங்கல்களை கொண்டு காணிக்கை செலுத்துகின்றனர். கோவிலை சுற்றிலும் மண், செங்கல்கள் குவிந்து கிடக்கின்றன.


கோவிலை பரகால மடம் நிர்வகித்து வருகிறது. கோவிலை ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவிட்டு, இரண்டாவது திருப்பதியாக உருவாக்க வேண்டும் என்பது மடத்தின் குறிக்கோள். தற்போது கோவில் சீரமைப்பு பணிகள் நடக்கின்றன. வராஹசுவாமியை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு, பரகால மடம் சார்பில் உணவு வழங்கப்படுகிறது.


எப்படி போகலாம்?


பெங்களூரில் இருந்து, 239 கி.மீ., மைசூரில் இருந்து, 170 கி.மீ., ஹாசனில் இருந்து, 58 கி.மீ., மாண்டியாவில் இருந்து, 58 கி.மீ., துாரத்தில் கே.ஆர்.பேட் உள்ளது. இங்கிருந்து, 19 கி.மீ,, துாரத்தில், வராஹநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது.


கர்நாடகாவின் முக்கிய நகரங்களில் இருந்தும், கே.ஆர்.பேட்டுக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. தனியார் பஸ்களின் வசதியும் உள்ளது. விமானத்தில் வருவோர், மைசூரு விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து அரசு அல்லது தனியார் வாகனத்தில் கோவிலுக்கு செல்லலாம்.


தரிசன நேரம்: காலை 9:30 முதல் மதியம் 1:30 மணி வரை; மாலை 3:30 முதல் இரவு 7:30 மணி வரை.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 25

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 5

மேலும்