பெங்களூரு நகர மாவட்டம் கொடிகேஹள்ளி அருகே, கன்னள்ளி கிராமத்தில் உள்ளது வீரபத்ரேஸ்வரா கோவில். சோழர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோவில் 2,000 ஆண்டுகள் பழமையானது. மூலவராக வீர பத்ரேஸ்வரா சுவாமி வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
விநாயகர், பத்ரகாளி அம்மன், ரேணுகாச்சார்யா சுவாமிகளுக்கு தனி சிலைகளும் உள்ளன. மிகவும் சிறப்பு வாய்ந்த விஷயமாக இந்த கோவிலில், இரண்டு சிவன் சிலைகள், இரண்டு நந்திகள் உள்ளன. அமாவாசை, கார்த்திகை, சிவராத்திரி அன்று சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. இதுதவிர தினமும் இரண்டு மணி நேரம், வீரபத்ரேஸ்வரருக்கு ருத்ராபிஷேகம், பூஜைகளும் நடக்கின்றன. சுவாமிக்கு அபிஷேகம் செய்த தண்ணீரை, பக்தர்கள் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர்.
அபிஷேக தண்ணீர், கோவில் கிணற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை பாட்டில்களில் பிடித்து சென்று, வீடுகளில் வைத்து பூஜை செய்கின்றனர். இப்படி செய்வதன் மூலம் வீட்டிற்குள் எந்த துஷ்ட சக்தியும் வராது; திருமண தடைகள் நீங்கும்; குழந்தை பாக்கியம் கிடைக்கும்; தங்களின் மனபாரம் குறையும் என்று, பக்தர்கள் நம்புகின்றனர்.
இங்கு நாகதோஷத்தை நீக்கும் பூஜைகளும் செய்யப்படுகின்றன. கோவில் வளாகத்தில் ஏராளமான நாக சிலைகள் உள்ளன. நவக்கிரக தரிசனமும் செய்யலாம். ஒவ்வொரு ஆண்டும் பெங்களூரு கரகம் முடிந்த மறுநாள், இந்த கோவிலில் திருவிழா நடக்கிறது. கொடிகேஹள்ளி, பேட்ராயனபுரா, எலஹங்கா, ஹெப்பால் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, கோலார், சிக்கபல்லாபூர், துமகூரு, பெங்களூரு ரூரல் மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.
கோவிலின் நடைவாசல் உயரம் குறைவாக இருப்பதால், பக்தர்கள் தலைகுனிந்து தான் செல்ல வேண்டும். பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. கோவிலுக்கு பின்பக்கம் பெரிய ஏரி உள்ளது. சுவாமி தரிசனம் முடிந்ததும், பக்தர்கள் அங்கு சென்று நேரத்தை கழிக்கலாம். தினமும் காலை, 6:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை கோவில் நடை திறந்து இருக்கும்.
மெஜஸ்டிக், கே.ஆர்.மார்க்கெட்டில் இருந்து கன்னள்ளி கிராமத்திற்கு, பி.எம்.டி.சி., பஸ்கள் செல்கின்றன. மெஜஸ்டிக்கில் இருந்து 241b பஸ்சும், கே.ஆர்.மார்க்கெட்டில் இருந்து 241p பஸ்சும் செல்கிறது.