பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் நம்மாழ்வார் மோட்ச வைபவம் நடந்தது.
மார்கழி மாதத்தையொட்டி, பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில் உற்சவ சிறப்பு பூஜைகள் கடந்த மாதம் முதல் நடந்து வருகின்றன. தசமி, ஏகாதசி, துவாதசி ஆகிய நாட்களில் முத்தங்கி சேவையில் மூலவப்பெருமாள் காட்சியளித்தார். தொடர்ந்து, தினமும் காலை, மாலையில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. அதன் தொடர்ச்சியாக, நேற்றுமுன்தினம் நம்மாழ்வார் மோட்ச வைபவம் நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் கோவிலை வலம் வருதல், ஆழ்வார்கள் பல்லக்கில் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, நம்மாழ்வார் மோட்ச வைபவம் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து நாளை (11ம் தேதி) கூடார வல்லி நிகழ்ச்சி நடக்கிறது.
* டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோவிலில் மார்கழி மாத சிறப்பு வழிபாடு நடக்கிறது. இதன் தொடர்ச்சியாக, நேற்றுமுன்தினம் நம்மாழ்வார் மோட்ச வைபத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நாளை (11ம் தேதி) கூடார வல்லியையொட்டி, காலை, 10:00 மணிக்கு ஆண்டாள், ரங்கமன்னாருக்கு திவ்ய திருமஞ்சன அபிேஷகம் நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு ஸ்ரீரங்க மன்னார் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. ஆண்டாளுக்கு பெருமாள் திருமண வரம் அளித்த நாளான அன்று, திருமணத்துக்காக காத்திருக்கும் ஆண், பெண் தங்கள் ஜாதகத்தை நகலெடுத்து கோவிலில் கொண்டு வந்து வைத்து வழிபட்டால் பலன் கிடைக்கும், என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதேபோன்று, பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில், மார்கழி சிறப்பு வழிபாடும், நம்மாழ்வார் மோட்ச வைபவமும் நடந்தது.