அய்யன் கோவிலில் குவிந்த பக்தர்கள்; நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்



பல்லடம்; பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அய்யன் கோவிலில் குவிந்த பக்தர்கள், நீண்ட வரிசையில், ரோட்டில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


பல்லடத்தை அடுத்த, சாமளாபுரம் பகுதியில், வாழைத் தோட்டத்து அய்யன் கோவில் உள்ளது. ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில், பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது. சுற்றுவட்டார் கிராம மக்கள் பலருக்கு குல தெய்வம் என்பதுடன், தோஷ பரிகாரங்கள் செய்வதற்காகவும், ஏராளமான பொதுமக்கள் இங்கு வருகின்றனர். குறிப்பாக, பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில், கிராம மக்கள் இக்கோவிலில் குவிந்து விடுகின்றனர்.


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கடந்த இரண்டு நாட்களாக இக்கோவிலில் கூட்ட நெரிசல் இருந்து வருகிறது. பொங்கல் வைத்தும், தோஷ பரிகாரங்கள் செய்தும் அதிகப்படியான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதர கோவில்களைப் போன்றே, பொது மற்றும் கட்டண தரிசனம் இங்கும் உள்ளது. பொது தரிசனத்தில் சென்றால் நேரம் அதிகரிக்கும் என்ற கருதி, பெரும்பாலான பக்தர்கள், பொதுமக்கள், 50 ரூபாய் கட்டணம் செலுத்தி, சிறப்பு தரிசனத்தில் செல்கின்றனர். ஆனால், அதற்கும் நீண்ட வரிசை உருவாகி, பக்தர்கள், ரோட்டிலேயே காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில், அதிகப்படியான பக்தர்கள் வந்து செல்லும் இக்கோவிலில், அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். கட்டணம் செலுத்தி சிறப்பு தரிசனத்தில் சென்ற போதும், ரோட்டில்தான் நிற்க வேண்டும் என்றால், எதற்காக கட்டணம் என்ற கேள்வி எழுகிறது. எனவே, பொது தரிசனம் அல்லது சிறப்பு தரிசனம் என எதுவாக இருந்தாலும், பக்தர்கள் ரோட்டிலும், வெயிலிலும் காத்திருந்து அவதிக்குள்ளாகாமல் இருக்க வேண்டும். பக்தர்கள் நலனை கருத்தில் கொண்டு, மேற்கூரை அமைக்கவும் வசதிகளை மேம்படுத்தவும் கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பக்தர்கள், பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்