பாலக்காடு; கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக கும்பமேளா, பாரதப்புழா நதிக்கரையில், கோலாகலமாக நடைபெற்று வரும் மகாமாக மகோற்சவம், வரும் இன்று அமிர்த ஸ்நானத்துடன் நிறைவடைகிறது. காலை 8:00 மணிக்கு ஆரத்தி படித்துறையில் புனித நீராடல் (அமிர்த ஸ்நானம்) நடைபெறும். இதில் நூற்றுக்கணக்கான நாக சன்னியாசிகளும், பல்வேறு பீடங்களைச் சேர்ந்த துறவிகளும், ஆயிரக்கணக்கான பக்தர்களும் புனித நீராடுவார்கள்.
இதுகுறித்து கும்பமேளா அமைப்பினர் கூறியதாவது: மகம் நட்சத்திரமும், துவிதியை திதியும் இணையும் சுபயோக நன்னாளில் இந்த மகா சங்கம் நிறைவு பெறுவது சிறப்பம்சமாகும். இந்தத் திவ்ய யோக காலத்தில் நீராடுவது பாவங்களை நீக்கி, பிறப்பு-இறப்பு சுழற்சியில் இருந்து ஆன்மாவுக்கு விடுதலை அளிக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. அமிர்த ஸ்நானத்தைத் தொடர்ந்து, தர்மத்தைக் காக்க வாழ்வை அர்ப்பணித்த துறவிகளை கவுரவிக்கும் யதி பூஜை நடைபெறும். துறவிகளின் பாதங்களைப் பூஜித்து அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். கும்பமேளாவின் மிக முக்கியமான நிகழ்வான இதில் சாதி, மதம் மற்றும் ஏழை-பணக்காரன் என்ற பாகுபாடின்றி அனைவரும் ஒரே வரிசையில் அமர்ந்து உணவருந்துவார்கள். இது சனாதன தர்மத்தின் சமத்துவக் கொள்கையை பறைசாற்றுவதாக அமையும். தொடர்ந்து மாலை நடைபெறும் நிளா ஆரத்தியோட இந்த மகா மகோற்சவம் முறைப்படி நிறைவுபெறும் என்றனர்.