குமரன் குன்று கோவிலில் தைப்பூச தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்



அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர்.


பிரசித்தி பெற்ற குமரன் குன்று, கல்யாண சுப்பிரமணியசாமி கோயிலில், கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் தைப்பூசத் தேர்த் திருவிழா துவங்கியது. 31ம் தேதி வரை தினமும் காலை 11:00 மணிக்கு சுவாமி திருவீதியுலா நடந்தது. 31ம் தேதி இரவு அம்மன் அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது. பிப். 1ம் தேதி காலை 8:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது, காலை 9:00 மணிக்கு வள்ளி தெய்வானை சமேதர கல்யாண சுப்பிரமணியசாமி தேருக்கு எழுந்தருளினார். மாலை 4:30 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. அறங்காவலர் குழு தலைவர் செல்வகுமார், செயல் அலுவலர் சபரீஸ்வரி, அறங்காவலர்கள், முக்கிய பிரமுகர்கள் வடம் பிடித்து, தேரை இழுத்தனர். பல ஆயிரம் பக்தர்கள் முருகனுக்கு அரோகரா என பக்தி கோஷம் எழுப்பினர். தேர் மீது பழம், எலுமிச்சை ஆகியவற்றை வீசி கல்யாண சுப்பிரமணிய சாமியை வணங்கினர். ஏராளமானோர் உணவு, நீர்மோர், குளிர்பானம் ஆகிவற்றை பக்தர்களுக்கு இலவசமாக வழங்கினர். முன்னதாக திடும் இசை இசைத்தபடி இசைக்கு ஏற்ப பக்தர்கள் நடனமாடி சென்றனர். இரவு 8:00 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. நாளை தெப்போற்சவமும், நாளை மறுநாள் மஞ்சள் நீர் உற்சவமும், வரும் 7ம் தேதி மறு பூஜையும் நடைபெறுகிறது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்