இறைவனை மகிழ்வோடும் அன்போடும் வழிபடவேண்டும்



திருப்பூர்: ‘தன்னை அன்போடும், மகிழ்வோடும் வழிபடுவோருக்கு, இறைவன் அனைத்தையும் வழங்குகிறார்’ என, சித்தாந்த பேராசிரியர் சிவ சண்முகம் பேசினார்.


கொங்கு மண்டல ஆடல் வல்லான் அறக்கட்டளை மற்றும் சபரி டைமண்ட்ஸ் சார்பில், திருவாசகம் பயிற்சி வகுப்பு, திருப்பூர், ஹார்வி குமாரசாமி மண்டப வளாகத்திலுள்ள திருவருள் அரங்கில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெற்று வருகிறது.


கோவையை சேர்ந்த சித்தாந்த பேராசிரியர் சிவ சண்முகம் பேசியதாவது:


பெருமானை இரு கரம் கூப்பி வழிபடுபவர்களுக்கெல்லாம், சுவாமி அருள்புரிகிறார். எப்பேர்ப்பட்ட நிலையில் இருந்தாலும், சுவாமிக்கு அடிமை என்கிற நினைப்பு வந்து, வழிபாடு செய்பவர்களை கடவுள் காப்பாற்றுகிறார் என்கிற உன்னதமான கொள்கையை திருவாசகம் சொல்கிறது.


இதற்கு முன் எத்தனையோ தவறுகள் செய்திருக்கலாம். எப்போது மனம் திருந்தி, சிவபெருமானை வழிபட வந்துவிட்டோமோ, அப்போதே இறைவன் நமக்கு அருள் செய்கிறார். நமக்கு தலையை கொடுத்ததே இறைவனை வணங்குவதற்காகத்தான். ‘சிரங்குவிவார் ஓங்குவிக்கும்’, அதாவது, தலை தாழ்த்தி வணங்குவோரை, உயர்த்துகிறார்.


இறைவனை, தலைமேல் வைத்து வணங்கவேண்டும். ‘நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி’ என்கிறார் மாணிக்கவாசகர். அதாவது அன்பே சிவமாக இருக்கிறார்.


எனவே, எல்லா உயிர்கள் மீது அன்பு காட்டவேண்டும். இந்த சமுதாயம் மீது அன்பு காட்டவேண்டும். அதுதான் திருவாசகம் முதலில் சொல்லும் உன்னதமான செய்தி.


அன்போடும் மகிழ்வோடும் செய்யும் வழிபாட்டுக்கு இறைவன் அனைத்தையும் அருளுகிறார். பெருமானை, அன்பு கொண்டு வழிபடவேண்டும். கட்டாயத்துக்காக அல்ல.


எவ்வளவு அருமையான வாழ்வை கொடுத்திருக்கிறார்; நல்ல சொத்து சுகங்களையெல்லாம் கொடுத்திருக்கிறார் என, ஒவ்வொரு நொடியும் அவருக்கு நன்றி சொல்லும் வகையில், மகிழ்வோடு வழிபட வேண்டும். அவ்வாறு வழிபடுவோர், எல்லாவிதமான நன்மையும் பெறுவர்.


இவ்வாறு, அவர் பேசினார். 


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்