திருப்புவனம்: பிப்.15ம் தேதி சிவராத்திரி திருவிழா நடைபெற உள்ள நிலையில் திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதி பட்டறைகளில் நேர்த்திக்கடன் அரிவாள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
நாடு முழுவதும் சிவராத்திரி அன்று குலதெய்வ கோயில்களுக்கு பக்தர்கள் பலரும் நேர்த்தி கடனாக அரிவாள் செலுத்துவது வழக்கம். திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதி பட்டறைகளில் நேர்த்தி கடன் அரிவாள் தயாரிப்பு பணி அதிகரித்துள்ளது. இரண்டு அடியில் இருந்து 25 அடி உயரம் வரை அரிவாள் தயாரிக்கின்றனர்.
சிறிய அரிவாள் நாள் ஒன்றுக்கு இரண்டு முதல் ஐந்து வரை தயாரிக்கின்றனர். 10 அடி முதல் 25 அடி உயரம் வரையிலான ராட்சத அரிவாள் பத்து முதல் 15 நாட்கள் வரை தயாரிப்பு பணி நீள்கிறது.தற்போது ரெடிமேடாக விற்பனை செய்யப்படும் சிறிய ரக அரிவாள் அதிகளவு தயாரிக்கப்படுகிறது. சீசனை பொருத்து ஒவ்வொரு பட்டறைகளிலும் 50 முதல் 100 அரிவாள்கள் வரை விற்பனையாகும், நேர்த்தி கடன் அரிவாள் தவிர சூலம், திரிசூலம் உள்ளிட்டவைகளும் தயாரிக்கப்படுகின்றன.
அரிவாள் தயாரிப்பாளர் ராஜேந்திரன் கூறுகையில், விவசாய கருவிகள் தயாரிப்பு பெருமளவு குறைந்து விட்டது. சிவராத்திரி என்பதால் நேர்த்திகடன் அரிவாள் தயாரித்து வருகிறோம்,கடந்தாண்டை விட இந்தாண்டு இரும்பு விலை அதிகரித்துள்ளது. ஆனால் நேர்த்தி கடன் அரிவாள் என்பதால் அதே விலையில் தயாரித்து வருகிறோம், இரண்டு அடி முதல் 25 அடி உயரம் வரை தயாரிக்கின்றோம், ஒரு அடி தயாரிக்க மூவாயிரம் ரூபாய் வரை ஆகும், 25 அடி உயர அரிவாள் ஒரு வாரத்தில் இரண்டு பேர் சேர்ந்து தயாரிப்போம், என்றார்.