பெங்களூரின் மையப் பகுதியில் வாகன ஓட்டி களுக்கு, 600 ஆண்டுகளுக்கும் மேலாக காவல் தெய்வமாக திகழ்ந்து வருகிறார், ‘டிராபிக்’ கணபதி.
ஆம்... பெங்களூரு கப்பன் பூங்கா அருகே கஸ்துாரிபா சாலையில் அமைந்து உள்ளது, பிரசன்ன கணபதி கோவில். 16ம் நுாற்றாண்டில் முதலாவது கெம்பே கவுடா ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. பெங்களூரிலேயே மிகவும் பழமையான விநாயகர் கோவில் இது என்று கூறப்படுகிறது.
கடந்த, 600 ஆண்டுகளுக்கு முன், இப்பகுதி சாலை ஓரத்தை சுத்தம் செய்யும் போது, இச்சிலை கண்டுபிடிக்கப்பட்டது. சாலை ஓரத்தில் பள்ளமாக இருந்ததால், அங்கு இந்த சிலையை பிரதிஷ்டை செய்தனர். அவ்வழியாக செல்லும் வணிகர்கள், விவசாயிகள், பயணியர், இந்த சிலையை வணங்கி விட்டு செல்வர். இதனால், தாங்கள் செல்லும் போது எந்தவித ஆபத்தும் ஏற்படாது என்று நம்பினர்.
இந்த கோவில், சாலை அருகே பள்ளத்தில் அமைந்திருந்ததால், அப்போது பக்தர்கள் படிக்கட்டுகள் வழியாக இறங்கி, சுவாமியை தரிசித்து வந்தனர். பின், மைசூரின் அப்போதைய மன்னர் ஜெயசாமராஜேந்திர உடையார், இவ்வழியாக தன் ரோல்ஸ் ராய்ஸ் காரில் செல்லும் போது, கோவில் அருகே கார் பழுதாகி நின்றது.
காரில் இருந்து இறங்கிய அவர், அருகில் இருந்த விநாயகரை வணங்கினார். சில நிமிடங்களில் கார் பழுது தானாக சரியானது. அதன்பின், மன்னரை போன்றே, இவ்வழியாக நடந்து செல்பவர்கள், வாகனங்களில் செல்பவர்கள், விநாயகரை தரிசித்து விட்டு தான் செல்வர். மைசூரு திவான் டி.ஆனந்தராவும் கூட, அடிக்கடி விநாயகரை தரிசித்து சென்றுள்ளதாக கூறுகின்றனர்.
இவரை வணங்கி விட்டு செல்வதால், தடைகள் நீங்கி பாதுகாப்பான பயணம் கிடைப்பதாக நம்புகின்றனர். புதிதாக கார் வாங்குவோரும் இங்கு தான் பூஜை போடுகின்றனர். இவ்வாறு வாகன ஓட்டிகள் இங்கு நிறுத்தி, விநாயகரை தரிசித்து செல்வதால், இவரை, ‘டிராபிக்’ விநாயகர் என்றும், வாகன விநாயகர் என்றும், பாதாள விநாயகர் என்றும் அழைக்கின்றனர்.
தினமும் காலை 8:30 முதல் மதியம் 12:00 மணி வரையிலும்; மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரையிலும் இக்கோவில் திறந்திருக்கும்.