கோத்தகிரி: கோத்தகிரி திம்பட்டி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ உச்சன காளியம்மன் கோவிலில் கடந்த, 20 நாட்களுக்கு முன்பு, மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இந்த கோவில் வருடாந்திர திருவிழா கடந்த வாரம் துவங்கியது. கோவிலுக்கு உட்பட்ட, அளியூர், திம்பட்டி, கப்பட்டி, சாமில்திட்டு, கன்னேரிமுக்கு, அணையட்டி மற்றும் கடக்கோடு உள்ளிட்ட கிராமங்களில், ஒரு வாரமாக, ஒவ்வொரு கிராமத்திலும் அம்மனின் திருவீதி உலா நடந்தது. இதில், பக்தர்கள் பஜனை, ஆடல் பாடலுடன் அம்மனை அழைத்து சென்றனர். ஒரு வாரமாக, அம்மனின் ஊர்வலம் ஒவ்வொரு கிராமங்களிலும் நடந்த நிலையில், விழா நிறைவு விழா நாளில், ஸ்ரீ உச்சன காளியம்மன் கோவிலுக்கு மீண்டும் அம்மனின் ஊர்வலம் திரும்ப அழைத்துவரப்பட்டது. அதிகாலை முதல், அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடத்தப்பட்டது. விழாவின் சிறப்பு அம்சமாக, கோவில் வளாகத்தில் உள்ள தெப்பக்குளத்தில் விழாவில் பங்கேற்ற பக்தர்கள் நீராடி மகிழ்ந்து, தங்களது நேர்த்திகடனை செலுத்தினர். இதே போல, கேர்பெட்டா, தும்பூர், பேரகணி மற்றும் கேர்க்கப்பை உள்ளிட்ட கிராமங்களிலும் மாகாளியம்மன் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.