திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோவிலில் பங்குனி தேரோட்டம்



திருப்புவனம்; திருப்புவனத்தில் புஷ்பவனேஷ்வரர் - சவுந்தரநாயகி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் பக்தர்களின் கரகோஷத்திற்கு இடையே நான்கு ரத வீதிகளையும் வலம் வந்தது.


சமயகுரவர்கள், திருஞானசம்பந்தர், அப்பர் சுந்தரர் சுவாமிகள் ஆகிய மூவரால் பாடப்பட்டதும் 36 வது திருவிளையாடல் நடந்த இடமான திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயிலில் ஒவ்வொரு வருடமும் பத்து நாட்கள் பங்குனி திருவிழா நடைபெறும், தினசரி அம்மனும், சுவாமியும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார்கள். இந்தாண்டு பங்குனி திருவிழா கடந்த மார்ச் 23ம் தேதி திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மார்ச் 30ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடந்ததையடுத்து இனறு காலை தேரோட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் பிரியாவிடை தாயாருடன் புஷ்பவனேஷ்வரரும், சிறிய தேரில் அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.


தேருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட பின் காலை 9:05 மணிக்கு தேர் நிலையை விட்டு கிளம்பியது. வழி நெடுகிலும் பக்தர்கள் வாசல் தெளித்து கோலமிட்டு அம்மன், சுவாமி எழுந்தருளிய தேரை வரவேற்றனர். வழி நெடுகிலும் தேர் இழுப்பவர்களுக்கும் பக்தர்களுக்கும் மோர், சர்பத், குடிநீர் வழங்கப்பட்டது. மங்கள இசையுடன், பாரம்பரிய கைலாய வாத்தியங்கள் முழங்க நான்கு ரத வீதிகளையும் வலம் வந்த தேர் 11:30 மணிக்கு நிலையை வந்தடைந்தது. நிலையை வந்தடைந்த உடன் தேருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. ஏப்ரல் 2ம் தேதி உற்சவர்களுக்கு அபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் தண்ணாயிரம் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்