அன்னூர்: அன்னூர் மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழாவில், அம்மன் திருவீதி உலா நடந்தது.
அன்னூர், மாரியம்மன் கோவில், 36ம் ஆண்டு பூச்சாட்டு திருவிழா, கடந்த 24ம் தேதி துவங்கியது. 30ம் தேதி வரை, தினமும் மாலையில், அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. ஏப். 5ம் தேதி ஊஞ்சல் உற்சவத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். 6ம் தேதி இரவு அணிக் கூடை எடுத்தல் நடந்தது. 7ம் தேதி அதிகாலையில் ஏராளமான பக்தர்கள் சக்தி கரகம் மற்றும் பூவோடு எடுத்து வந்தனர். காலை 11:30 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மாலையில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் முக்கிய வீதிகளில் வழியாக உலா வந்து அருள் பாலித்தார். நேற்று முன்தினம் காலையில் பொங்கல் வைத்தலும், மாவிளக்கு ஊர்வலமும் நடந்தது. நேற்று காலை அபிஷேக ஆராதனையும், மஞ்சள் நீர் உற்சவமும் நடந்தது. பக்தர்கள் அலகு குத்தி தேர் இழுத்து வந்தனர். நூற்றுக்கணக்கானோர் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.