திருக்கழுக்குன்றம்: செங்கல்பட்டு தேர்தல் காவல்துறை பார்வையாளர் ப்ரீத்தி பிரியதர்ஷனி, திருக்கழுக்குன்றத்தில் கிரிவலம் சென்று, வேதகிரீஸ்வரரை தரிசித்து வழிபட்டார். செங்கல்பட்டு மாவட்ட சட்டசபை தொகுதிகளுக்கு, தேர்தல் காவல்துறை பார்வையாளராக, ப்ரீத்தி பிரியதர்ஷினியை, தேர்தல் ஆணையம் கடந்த மாதம் நியமித்தது. தேர்தல் தொடர்பான புகாரை, மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி., அலுவலகத்தில், தினமும் காலை 11:00 மணி முதல், பகல் 12:00 மணி வரை, அவரிடம் தெரிவிக்குமாறும் அறிவிக்கப்பட்டது. திருப்போரூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட திருக்கழுக்குன்றத்தில், சட்டசபை தேர்தல் நாளான வரும் 23ம் தேதி, வேதகிரீஸ்வரர் கோவில் சித்திரை பெருவிழா, 63 நாயன்மார்கள் கிரிவல உத்சவம் நடக்கிறது. காவல்துறை பார்வையாளரான ப்ரீத்தி பிரியதர்ஷன், நேற்று, மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி., அறிவழகனுடன், கிரிவல பாதையில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார். மேலும், கிரிவல பாதை பகுதியையும் பார்வையிட்டு, வேதகிரீஸ்வரர் கோவிலிலும் தரிசித்து வழிபட்டார். தேர்தலை கருத்திற்கொண்டு, அதற்கேற்ப உத்சவத்தை நடத்துமாறு கூறினார்.