புதுச்சேரி: புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில், 19ம் ஆண்டு பால்குட அபிஷேகம் மற்றும் சித்திரை அமாவாசை பெருவிழா இன்று நடந்தது.
விழாவையொட்டி, இன்று காலை 7:00 மணிக்கு காப்பு கட்டுதல் மற்றும் அலகு போடுதல் நிகழ்ச்சி நடந்தது. காலை 7:15 மணிக்கு வரசித்தி விநாயகர் கோவிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாகப் புறப்பட்டனர். மாடவீதிகள் வழியாக சென்று பால்குட ஊர்வலம், பின், கோவிலையடைந்தது. 11:30 மணிக்கு மூலவர் அம்மனுக்குப் பாலாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 9:30 மணிக்கு உற்சவர் அங்காள பரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மாட வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகக் குழுவினர் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.