மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபம் இன்று நடைபெற்றது.
சிவகங்கை சமஸ்தானம், தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட மானாமதுரை வீர அழகர் கோயிலில் வருடம் தோறும் சித்திரை திருவிழா 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். இந்த வருடத்திற்கான விழா கடந்த 27ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழா நாட்களின் போது வீர அழகர் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான எதிர்சேவை நிகழ்ச்சிக்காக இன்று இரவு கோயிலுக்கு பின்புறம் உள்ள கொம்புக்காரனேந்தல் மண்டகப்படியில் வீர அழகர் வேல் கம்பு வளரி ஏந்தி அருள்பாலித்தார்.இதனைத் தொடர்ந்து இரவு 11:00 எதிர்சேவை நிகழ்ச்சி முடிந்தவுடன் பூப்பல்லாக்கில் எழுந்தருளி பெருமாள் கோயிலை சென்றடைந்தார். இன்று மே.1ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு வீர அழகர் வெள்ளை குதிரை வாகனத்தில் கள்ளழகர் வேடம் பூண்டு நகரின் முக்கிய வீதிகளின் வழியே வலம் வந்து காலை 7:31 மணிக்கு ஆனந்தவல்லி அம்மன் கோயில் எதிர்புறம் உள்ள வைகை ஆற்றில் இறங்கினார். ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோஷத்துடன் தரிசனம் செய்தனர். நாளை மறுநாள் இரவு வைகை ஆற்றில் நிலவொளியில் நிலாச்சோறு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.