திருவொற்றியூர்: தியாகராஜ சுவாமி வசந்த உற்சவம், கோலாகலமாக நிறைவுற்றது.
சென்னை, திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோவிலில் ஆண்டுதோறும், சித்திரை – வைகாசி மாதத்தில், தியாகராஜ சுவாமி வசந்த உற்சவம், 15 நாட்கள் வெகு விமரிசையாக நடக்கும். அதன்படி, இவ்வாண்டு, மே, 2 ம் தேதி, தியாகராஜ சுவாமி வசந்த உற்சவம் துவங்கியது. அதன்படி, விழா நாட்களில், அலங்கரிக்கப்பட்ட தொட்டியில், திரிபுர சுந்தரி சமேத தியாகராஜ சுவாமி எழுந்தருளி, கோவில் மையத்தில் உள்ள வசந்த தீர்த்த குளத்தை ஒன்பது முறை திருநடனம் புரிந்தார். சனி மற்றும் புதன் கிழமைகளில் மட்டும், சுவாமி மாடவீதி உற்சவம் நடைபெற்றது. நிறைவு நாளான நேற்றிரவு, பிரமாண்ட மலர் மாலைகள் அணிந்து, தியாகராஜ சுவாமி தொட்டியில் எழுந்தருளினார். தனி சப்பரத்தில் வடிவுடையம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
சாம்பிராணி துாபமிட, கயிலாய வாத்தியங்கள் முழங்க சுவாமி புறப்பாடாகியது. கோவில் வசந்த தீர்த்த குளத்தை சுற்றி, தேவாரம் பாடியபடியும், மேகவீணை வாசிப்புடனும், கயிலாய வாத்தியங்கள் முழங்க என, தலா மூன்று சுற்றுகள் வீதம், அமர்ந்த கோலத்தில் ஒன்பது முறை அந்நடனம் எனும் திருநடனம் புரிந்தார்.அப்போது, சாமந்தி, அரளி, மல்லி, ரோஜா போன்ற வண்ண மலர்கள் துாவப்பட்டன. பின், மாடவீதி உற்சவம் நடந்தது. நிறைவாக, அலங்கரிக்கப்பட்டிருந்த வசந்த மண்டபத்தில் எழுந்தருளிய தியாகராஜ சுவாமிக்கு பானகம் கொடுக்கும் வைபவம் நடந்தேறியது. இத்துடன், வசந்த உற்சவ பெருவிழா நிறைவுற்றது.உற்சவத்திற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி கமிஷனர் நற்சோணை தலைமையிலான ஊழியர்கள் சிறப்பாக மேற்கொண்டிருந்தனர்.