பாலக்காடு: கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ளது பிரசித்தி பெற்ற கல்பாத்தி விசாலாட்சி சமேத விசுவநாதர் கோவில். இக்கோவிலில் எல்லா ஆண்டும் நவ. மாதம் நடக்கும் தேர் திருவிழா பிரபலமாகும்.இக்கோவிலில் இதற்கு முன்பு கடந்த 1956, 1981 மற்றும் 2008 ஆகிய ஆண்டுகளில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது, சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பணிகள் முடிந்துள்ள கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
யாகாச்சாரியார் சுவாமிநாத சிவாச்சாரியார், கோவில் தந்திரி ரத்ன சபாபதி சிவாச்சாரியார் மற்றும் முக்கிய புரோகிதர் பிரபுதேவா சேனாபதி சிவாச்சாரியார் ஆகியோர் தலைமையில் அதிகாலை 4:00 மணி முதல் வேதபாராயணம், திருமுறை பாராயணம், அஷ்டம கால யாகபூஜை, மூலமந்திர ஹோமம், திரவ்யாஹுதி, பிராயச்சித்த ஹோமம் மற்றும் பூர்ணாஹுதி ஆகிய சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து, புனித நீர் அடங்கிய கலசங்கள் கோவிலைச் சுற்றி வலம் கொண்டு வரப்பட்டன. இதனைத் தொடர்ந்து, காலை 6:30 மணி முதல் 7:00 மணிக்குள் முக்கிய சடங்கான விசாலாட்சி சமேத விஸ்வநாதர் சன்னதி மற்றும் பரிவார தேவதைகளின் கோபுரக் கலசங்களுக்குப் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து காலை 7:30 மணிக்க தசதரிசனம், 9:00க்கு மகா தீபாராதனை நடந்தது. மாலை 4:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. 5:30 மணிக்கு பஞ்சவாத்தியம் முழங்க யானை அணிவகுப்புடன் சீவேலி நடந்தது. இரவு 9:00க்கு உற்சவ மூர்த்திகள் திருவீதி உலா வரும் வைபவத்துடன் கும்பாபிஷேக விழா நிறைவடைந்தது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை பூர்வாங்க பூஜைகளும், 21ம் தேதி முதல் அஷ்டகால பூஜைகளும், பல்வேறு கலை மற்றும் ஆன்மீகச் சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடந்திருந்தன. கோவிலின் கோபுரங்களின் மேல் பிரதிஷ்டை செய்வதற்கான புனிதக் கலசங்களை காஞ்சி காமகோடி ஆதிசங்கர பீடம் உபயமாக வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.