புதுக்கோட்டை: ஆலங்குடி அருகே கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் வைரத்தேரோட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கொத்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தேர்த் திருவிழாவையொட்டி, கடந்த 10ம் தேதி பூச்சொரிதல் விழா நடந்தது. இதில், கொத்தமங்கலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் ஊர்வலமாக பூத்தட்டுக்களை கோவிலுக்கு கொண்டு வந்து, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தனர். கடந்த 17ம் தேதி காப்புக்கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து, தினமும் அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான வைரத்தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. இதில், வாழவந்த பிள்ளையார், பேச்சியம்மன், மாரியம்மன் என 3 தனித் தனி தேர்களில் வீற்றிருக்க சிறுவர்கள், பெண்கள், பெரியவர்கள் வடம் பிடித்து தேரை இழுத்துச்சென்றனர்.