ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் நேற்று, கற்பக விருட்ச வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 7 ஆண்டுகளுக்கு பின் வைகாசி விசாக பிரம்மோத்சவத்தின் தேர் திருவிழா இன்று நடைபெறுகிறது.
ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டையில் முருகன் கோவில் அமைந்துள்ளது. 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த இக்கோவில், ஏழு அடி உயரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்.
இக்கோவிலில், ஆண்டு தோறும் வைகாசி மாதம் 10 நாள் பிரம்மோத்சவ விழா விமரிசையாக நடைபெறும். அதன்படி கடைசியாக 2019ம் ஆண்டு வைகாசி பிரம்மோத்சவ விழா நடைபெற்றது.
இதையடுத்து, கொரோனா பெருந்தொற்று மற்றும் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகளால் ஏழு ஆண்டுகளாக பிரம்மோத்சவ விழா நடைபெறவில்லை.
இதையடுத்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, ஆண்டுதோறும் கோவிலில் நடத்தப்படும் முக்கிய விழாக்கள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி, 7 ஆண்டுகளுக்கு பின், வைகாசி விசாக பிரம்மோத்சவ விழா இம்மாதம் 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து, பல்வேறு வாகனங்களில் வள்ளி, தெய்வானை சமேத முருகன் வீதியுலா புறப்பாடு நடந்தது.
ஆறாம் நாளான நேற்று காலை, சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரத்தை தொடர்ந்து, கற்பக விருட்ச வாகனத்தில் முருகன் எழுந்தருளி வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
முக்கிய நிகழ்வான தேர் திருவிழா இன்று நடைபெறுகிறது. காலை 6:30 மணிக்கு கோவில் உள்பிரகாரத்தில் ரத உத்சவம் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து, காலை 9:30 மணிக்கு தேர் பவனி நடக்க உள்ளது.