திருப்பூர்: ராக்கியாபாளையம் ஸ்ரீபட்டத்தரசி அம்மன் கோவிலில் நாளை மறுநாள்(17ம் தேதி) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
திருப்பூர், காங்கயம் ரோடு, ராக்கியாபாளையத்தில் உள்ள ஸ்ரீபட்டத்தரசி அம்மன் கோவிலில் திருப்பணிகள் நிறைவடைந்து, கும்பாபிஷேகம் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது. நேற்று நடந்த ஊர்வலத்தில் ராக்கியாபாளையம் மற்றும் கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த பெண்கள் முளைப்பாலிகை, தீர்த்தக்குடம் எடுத்து மேள தாளத்துடன் கோவிலை வந்தடைந்தனர். வாணவேடிக்கையுடன் நடனமாடும் குதிரை, கறவை மாடு, ரேக்ளா வண்டியுடன் ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி பூஜைகள் நடந்தன.
இன்று காலை விநாயகர் வழிபாட்டு ஹோமங்களும், மாலையில் முதற்கால வேள்வி பூஜைகளும் நடக்கின்றன. நாளை இரண்டு மற்றும் மூன்றாம் கால வேள்வி பூஜைகளைத் தொடர்ந்து, 17-ம் தேதி காலை 4:30 மணிக்கு நான்காம் கால வேள்வி பூஜைகள் நடைபெறுகின்றன.
காலை 6:00 மணிக்கு விமான கலசங்கள், பட்டத்தரசி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. பின் மகா அபிஷேகம், அலங்கார பூஜைகள், அன்னதானம் நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை கோவில் டிரஸ்ட் நிர்வாகிகள், திருப்பணி கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.