வடகோவை: மாநகராட்சி 68வது வார்டு டாடாபாத்தில் சவுபாக்கிய சக்தி விநாயகர் கோவில் உள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோவிலில் அன்றாட பூஜைகள், வழிபாடுகள், கீதை உபதேசம் போன்றவை நடக்கின்றன.
இக்கோவிலை இடிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. யாருக்கும் பாதிப்பு இல்லாமல் அமைந்துள்ள கோவிலை இடிக்க வேண்டாம் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நேற்று கோவில் வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
‘‘இந்திய உணவு கழகத்தின் சுற்றுச்சுவரை ஒட்டி இக்கோவில் அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் 500 குடும்பத்தினர் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். கோவிலை ஒட்டியே உணவு கழகத்துக்கு பாதாள சாக்கடை குழாய் செல்கிறது.
சட்டவிரோதம் என சிலர் தொடுத்த வழக்கில், கோவிலை இடிப்பதா என்பதை மாநகராட்சியே முடிவு செய்யலாம் என ஐகோர்ட்உத்தரவிட்டுள்ளது. கோவிலால் யாருக்கும் இடையூறு இல்லை. எனவே, இடிக்கும் முடிவை கைவிட வேண்டும்,’’ என்கிறார், கஸ்துாரிபா மகளிர் சங்க செயலாளரும், கோவில் துணை நிர்வாகியுமான மகாலட்சுமி.
நகரமைப்பு அலுவலர் தாமோதரனிடம் கேட்டபோது,‘‘நீதிமன்ற உத்தரவின்படியே நடவடிக்கை எடுக்கிறோம். இடிப்பதை இப்போதைக்கு தள்ளிவைத்துள்ளோம்’’ என்றார்.