காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தேரோட்டம் முடிந்து இரு வாரங்களுக்கு மேலாகியும், தேரை பாதுகாப்பாக மூடாததால், மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து வீணாகி வருகிறது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோத்சவம், மே 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், ஏழாம் நாள் உத்சவமான தேரோட்டம், 3ம் தேதி கோலாகலமாக நடந்தது.
தேரோட்டத்தையொட்டி, வெயில், மழை, புயலின்போது தேர் சேதமடையாமல் இருக்க, தேரின் பாதுகாப்புக்காக போடப்பட்டிருந்த துருப்பிடிக்காத இரும்பு தகடுகளால் அமைக்கப்பட்டிருந்த கூரை அகற்றப்பட்டது.
தற்போது, தேரோட்டம் முடிந்து இரு வாரங்களுக்கு மேலாகியும் மீண்டும் பாதுகாப்பு தடுகளால் கூரை அமைத்து தேர் மூடப் படாமல் உள்ளது
இதனால், தேர் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் வீணாகி வருகிறது. இதனால், தேரின் பாகங்கள், மரச்சிற்பங்கள், சக்கரங்கள் சேதமாகும் சூழல் உள்ளது. தேருக்கு பூசப்பட்ட வர்ணங்களும் பொலிவிழக்கும் சூழல் உள்ளது.
எனவே, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேருக்கு, பாதுகாப்பு கூரை அமைக்க, ஹிந்து சமய அற நிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.