திருவாடானை: திருவாடானை அருகே திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் பக்தர்கள் தங்கும் மண்டபம் கூரை சேதமடைந்துள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி ஆய்வு செய்தார். திருவாடானை அருகே திருவெற்றியூரில் பாகம்பிரியாள் கோயில் உள்ளது. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளிலும் ஆண்டு தோறும் நடைபெறும் சித்திரை, ஆடி மாத திருவிழாக்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். சிவகங்கை, புதுக்கோட்டை போன்ற பல்வேறு வெளி மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வருவார்கள்.
பக்தர்கள் தங்களின் வேண்டுதல் நிறைவேறவும், நேர்த்திகடன் செலுத்தவும் முதல் நாள் இரவு கோயில் வளாகத்தில் தங்கியிருந்து மறுநாள் சுவாமி தரிசனம் செய்வார்கள். பக்தர்கள் தங்கி ஓய்வெடுப்பதற்காக 1982 ல் கோயில் வளாகத்தில் மண்டபம் கட்டப்பட்டது. 44 ஆண்டுகள் ஆனதால் போதிய பராமரிப்பின்றி சேதமடைந்த நிலையில் உள்ளது.
அப்பகுதி மக்கள் கூறுகையில், மண்டபத்தின் கூரையில் உள்ள பூச்சுகள் பெயர்ந்து அடிக்கடி கீழே உதிர்ந்து விழுகிறது. மண்டபத்தை தாங்கி நிற்கும் துாண்களில் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. சில நாட்களுக்கு முன்பு சிமென்ட் பூச்சு உதிர்ந்து விழுந்தது. யாரும் அங்கு படுக்காததால் விபத்து தவிர்க்கப்பட்டது என்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி மற்றும் அலுவலர்கள் மண்டபத்தை பார்வையிட்டனர். சேதமடைந்த மண்டபத்தை சீரமைப்பது, அல்லது புதிய மண்டபம் கட்டுவது குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது.